காவல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர்
காவல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர்pt web

‘டர்பன் அணிந்தால் காலிஸ்தானியா?’ - மேற்கு வங்க காவல் அதிகாரிக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள்...!

தலைப்பாகை அணிந்துள்ள ஒவ்வொருவரையும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் என பாஜக கருதுவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் சந்தேஷ்காலி என்ற பகுதியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேற்குவங்க காவல்துறையின் சிறப்புக் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி ஜஸ்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சந்தேஷ்காலியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவருக்கும் சந்தேஷ்காலிக்கு வந்திருந்த பாஜக தலைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி உடன் வந்திருந்த பாஜக ஆதரவாளர்கள் காவல் அதிகாரியை காலிஸ்தானி என அழைத்ததாக கூறப்படுகிறது.

மேற்கு வங்க காவல் அதிகாரி ஜஸ்பிரீத் சிங் ஐபிஎஸ்
மேற்கு வங்க காவல் அதிகாரி ஜஸ்பிரீத் சிங் ஐபிஎஸ்

தலைப்பாகை அணிந்திருந்தால் காலிஸ்தானியா?

இதுதொடர்பாக பாஜக ஆதரவாளர்களுடன் தனது கடுமையான எதிர்வினையை வெளிப்படுத்திய காவல் அதிகாரி, “நான் தலைப்பாகை அணிந்திருப்பதால், நீங்கள் என்னை காலிஸ்தானி என சொல்கிறீர்களா? இதுதான் நீங்கள் கற்றுக்கொண்டதா? ஒரு காவல் அதிகாரி தலைப்பாகை அணிந்து தனது கடமையை நேர்மையாக செய்தால் அவர் உங்களுக்கு காலிஸ்தானியாக மாறுகிறாரா? வெட்கப்படுகிறேன். உங்கள் மதத்தைப் பற்றி நான் ஏதும் பேசுகிறேனா? என் மதத்தைப் பற்றி மட்டும் ஏன் பேசுகிறீர்கள்?” என தெரிவித்துள்ளார்.

“பிரித்தாளும் அரசியல் வெட்கமின்றி எல்லை மீறியுள்ளது”

இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அதில் “பாஜகவின் பிரித்தாளும் அரசியல் இன்று வெட்கமின்றி எல்லை மீறியுள்ளது. நமது தேசத்துக்கான அவர்களின் தியாகங்கள் மற்றும் அசைக்க முடியாத உறுதிப்பாட்டுக்காகப் போற்றப்படும் நமது சீக்கிய சகோதர சகோதரிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியை வன்மையாக கண்டிக்கிறேன். வங்காளத்தின் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதைச் சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்” என கூறியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோவையும் பதிவிட்டு காங்கிரஸ் கட்சியும் கருத்து தெரிவித்துள்ளது. அதில், “பாஜகவைச் சேர்ந்தவர்களின் மோசமான செயல்களைப் பாருங்கள். நாட்டிற்காக இரவு பகலாக சேவை செய்யும் காவல் அதிகாரி, அவர் தலைப்பாகை அணிந்திருந்ததால் மட்டுமே காலிஸ்தானி என அழைக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இந்த சமூகத்தில் மதத்தின் பெயரால் விஷத்தைப் பரப்பவே செயல்பட்டுள்ளது. பாஜக பரப்பும் மதவெறி, சட்டத்தின் பாதுகாவலர்களை மதத்தின் பெயரால் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தும் அளவுக்கு நமது பன்முக கலாசாரத்தை விஷமாக்குகிறது” என தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க காவல்துறையும் அதிருப்தி

மேற்கு வங்க காவல்துறையும் சுவேந்து அதிகாரியின் செயல்பாட்டுக்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மேற்குவங்க காவல்துறை, “எங்கள் அதிகாரி ஒருவரை மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் காலிஸ்தானி என அழைக்கிறார். அது அவரது தவறு. உண்மையில் அந்தக் காவலர் பெருமைக்குரிய சீக்கியர் எனும் அதே வேளையில் சட்டத்தை அமல்படுத்துவதில், திறமையான காவல் அதிகாரி.

ஆகவே எதிர்க்கட்சி தலைவரின் இந்தக் கருத்து தீங்கிழைக்கும் கருத்தாகவே பார்க்கப்படுகிறது. வகுப்பு வாதத்தையும் தூண்டுகிறது இது. அதனால் இது குற்றச்செயலாகும். மக்களை வன்முறையில் ஈடுபடுத்தவும் சட்டத்தை மீறவும் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டது இக்கருத்து. தனிநபரின் மத அடையாளம் மற்றும் நம்பிக்கைகள் மீதான தாக்குதல், ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல்” என தெரிவித்துள்ளது.

“யாரும் யாரையும் காலிஸ்தானி என அழைக்கவில்லை” - பாஜக

இருந்தபோதும் சுவேந்து அதிகாரியுடன் வந்திருந்த பாஜக எம்.எல்.ஏ அக்னிமித்ரா பால், “யாரும் யாரையும் காலிஸ்தானி என அழைக்கவில்லை. மம்தா பானர்ஜியிடம் ஆதாரம் இருந்தால் வீடியோ வெளியிடட்டும். மேற்குவங்க காவல்துறை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கைகூலியே தவிர வேறில்லை. சந்தேஷ்காலியில் பெண்களை துன்புறுத்திய ஷாஜஹான் ஷேக் இன்னும் தலைமறைவாக இருக்கிறார். சந்தேஷ்காலியின் கவனத்தை திசை திருப்புவதை நிறுத்திவிட்டு ஷாஜஹான் ஷேக்கை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேற்குவங்க காவல்துறை அரசியலில் கவனம் செலுத்தாமல், காவல்துறையில் கவனம் செலுத்தட்டும்” என கடுமையாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com