மேற்கு வங்கம் | கொல்கத்தா பயிற்சி மருத்துவர் வழக்கு.. தாயாருக்கு சீட் வழங்கிய பாஜக!
வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு (2024, ஆகஸ்ட் 9), கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
294 தொகுதிகளைக் கொண்டுள்ள மேற்கு வங்கத்தில், ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அங்கு ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸும், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் பாஜகவும் கடுமையான போட்டியில் உள்ளன. இரண்டு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் 2024ஆம் ஆண்டு ஆர்.ஜி. கர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது.
வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு (2024, ஆகஸ்ட் 9), கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமூல் காங்கிரஸுக்கும் (TMC) பாஜகவுக்கும் இடையே இந்த வழக்கு ஒரு பதற்றமான சூழலை உருவாக்கியது. குற்றவாளிகளை மாநில அரசு பாதுகாப்பதாகவும், விசாரணையைத் தடுப்பதாகவும் பாஜக குற்றம்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளை திரிணாமூல் கட்சி வன்மையாக மறுத்ததோடு, உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் கூறியது.
இந்தக் குற்றம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சமூக சேவகர் சஞ்சய் ராய்க்கு, சிபிஐ நீதிமன்றம் 2025 ஜனவரியில் ஆயுள் தண்டனை விதித்தது. இருப்பினும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், மாநில அரசு வழங்கிய இழப்பீட்டை நிராகரித்து, இந்த வழக்கின் பரந்த சூழ்நிலைகள் குறித்தும் கேள்விகளை எழுப்பி, தங்களுக்கு முழுமையான நீதி வேண்டும் என அரசைக் கோரி வருகின்றனர். இந்த நிலையில்தான் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில், பாஜக 2024 ஆர்.ஜி.கர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரை வேட்பாளராக அறிவித்துள்ளது.
அந்த மருத்துவரின் தாயாரான ரத்னா தேப்நாத், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பனிஹாட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். நீதிக்கான தனது தேடலாலும், அமைப்பு ரீதியான தோல்விகள் எனத் தாம் கருதுபவற்றை எதிர்த்துப் போராடும் தனது விருப்பத்தாலுமே இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாக ரத்னா தேப்நாத் தெரிவித்துள்ளார். தேப்நாத்தை, பாஜக வேட்பாளராக நிறுத்தியிருப்பதால் அது திரிணாமுல் காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.

