’மாணவர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கிறோம்'- உ.பி முதல்வரின் பேச்சும், காங்கிரஸ் எம்பியின் கேள்வியும்!
மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய கல்வி நிதியை கொடுக்க முடியும் என்று விடாப்பிடியாக மத்திய கல்வித்துறை தெரிவித்து வரும்நிலையில், இருமொழிக்கொள்கையில் உறுதியுடன் இருக்கிறது தமிழ்நாடு அரசு.
இந்தி திணிப்பது ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், இந்தி பேசும் மாநிலங்கள் தென்னிந்திய மொழிகளை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், தென்னிந்திய மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுவது ஏன் என்ற திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து கேள்வியும் முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். அதில், உபியில் மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.
இது குறித்து மேலும், அவர் தெரிவிக்கையில், "உ.பி.யில், நாங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளைக் கற்பிக்கிறோம், இதனால் உ.பி. சிறுமையான மாநிலமாகிவிட்டதா ? உ.பி.யில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்படி இந்தி படிக்கவிடாமல் அரசியல் செய்வது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதை பாதிக்கும்.” என்று பேசியுள்ளார்.
இந்நிலையில், எதிர்வினை ஆற்றியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்.
இது குறித்து தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், “உத்தரப்பிரதேசத்தில் தமிழ் ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் ? எத்தனை மாணவர்கள் தமிழ் மொழியை கற்று வருகின்றனர்? இந்த தரவுகளைத் தர உ.பி. அரசு தயாரா? இந்தியைப் படித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் தமிழ்நாடு மாணவர்களுக்கு கிடையாது. தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வரும் புலம்பெயர் தொழிலாளர்கள். தமிழ் படித்துவிட்டு இங்கே வருவதில்லை. இந்தியைத் திணிப்பதை நிறுத்துங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த வாரம், ANI செய்தி நிறுவனத்திற்கு உபி முதல்வர் அளித்த பேட்டியில்,மொழியை வைத்து பிளவை ஏற்படுத்தவேண்டாம் என்றும், ஓட்டு வங்கி குறைவதாக நினைக்கும்போது இது போன்று பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் திமுகவை தெரிவித்திருந்தநிலையில், தற்போது மீண்டும் இதுகுறித்து பேசியிருப்பது அரசியல் களத்தில் விவாதத்தினை தூண்டியுள்ளது.