வக்ஃப் மசோதா நாளை தாக்கல் |நிதிஷ், சந்திரபாபு நாயுடு கட்சிகளின் ஆதரவு எதற்கு?
வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது, வக்ஃப் நிலமா, இல்லையா என்பதை மாவட்ட நிா்வாகம் மற்றும் நீதிமன்றங்கள் முடிவு செய்ய அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை சட்டத்தில் மேற்கொள்ளும் வகையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது. மேலும், மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனையடுத்து அந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக, 31 பேர் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வக்ஃப் வாரிய சட்ட வரைவில் 14 மாற்றங்களுடன், நாட்டில் முஸ்லிம் தொண்டு சொத்துக்கள் நிர்வகிக்கப்படும் விதத்தில் வக்ஃப் திருத்த மசோதாவுக்கு கூட்டு நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 30 அன்று, ஆளும் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பரிந்துரைத்த 14 திருத்தங்களை நாடாளுமன்ற குழு ஏற்றுக் கொண்டுள்ளது. அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.
இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த மார்ச் 10ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 4-ஆம் தேதியுடன் இந்த கூட்டத்தொடர் முடிவடைய இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நாளை (ஏப்.2) மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
இதையடுத்து, மக்களவையில் திருத்தப்பட்ட வக்ஃப் மசோதா விவாதத்துக்கு வரும் நிலையில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கட்சி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடுமையாக எதிர்க்க திட்டமிட்டுள்ளன. அதேநேரத்தில், பா.ஜ.க. எம்பிக்கள் அனைவரும் நாள் முழுவதும் அவையில் இருக்க வேண்டுமென பா.ஜ.க. கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பாஜக உறுப்பினர்கள் பலரும் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ள நிலையில், அக்கூட்டணியில் உள்ள சில கட்சியினர் என்ன செய்யப்போகிறார்கள் என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது. குறிப்பாக, மராட்டிய முன்னாள் முதல்வர் ஏக்நாத் சிண்டேவின் சிவசேனா, பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் எல்.ஜெ.பி. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
தவிர, கூட்டணியில் இல்லாத அதிமுக என்ன செய்யப்போகிறது என்பதும் கேள்வியாக உள்ளது. தற்போது பாஜக -அதிமுக கூட்டணி பற்றிய பேச்சுக்கள் நடைபெற்று வரும் சூழலில் இந்த மசோதாவிற்கு அவர்களுடைய முடிவு உற்று கூநோக்கப்படுகிறது. மறுபுறம் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, பாமக, தா.ம.க. போன்ற கட்சிகளும் என்ன முடிவெடுக்கப் போகின்றன என்பதும் கேள்வியாகவே உள்ளது. மக்களவையை பொறுத்தவரை பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 இடங்கள் இருக்கின்றன. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு 250 இடங்கள்தான் உள்ளன. எனவே மக்களவையில் இந்த மசோதா சுலபமாக நிறைவேறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. அதுபோல், மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியிடம் 125 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிக்கு 88 இடங்களே உள்ளன. இரு கூட்டணியிலும் இடம்பெறாத உறுப்பினர்கள் 23 பேர் உள்ளனர்.