"வெவ்வேறு தெய்வங்களை வழிபட்டாலும் நாம் அனைவரும் சகோதரர்களே" - புதுச்சேரி ஆளுநர் கைலாஷ் நாதன்!
செய்தியாளர்: மணிகண்டபிரபு.
மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாடு முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பல்வேறு இந்து அமைப்பைச் சார்ந்த தலைவர்கள் மாநாட்டுத் திடலுக்கு தினமும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், இன்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ நாதன் முருக பக்தர் மாநாடு நடைபெறும் திடலுக்கு வருகை தந்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,
புராணங்களை தாண்டி முருகன் ஒரு தமிழ்க் கடவுள். தமிழர் அதிகம் வழிபடும் கடவுள் முருகன். என்னுடைய குலதெய்வமும் முருகன் தான். முருகன் மீது எனக்கு ஒரு தனிப்பட்ட நம்பிக்கை உண்டு. மனதில் சிறு சிறு பயம் வரும்போது, யாமிருக்க பயமேன் என்ற வார்த்தை மனதில் பதிந்தது. தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் இன்னும் முருகனை மறக்காமல் வழிபட்டு வருகிறார்கள். குஜராத்தில் 45 ஆண்டுகள் பணி செய்தாலும், என் குலதெய்வமான முருகன். ஒருநாளும் வழிபடாமல் இருந்ததில்லை.
நான் புதுச்சேரியில் ஆளுநராக பதவி ஏற்றவுடன் நான் சென்ற முதல் இடம் அங்குள்ள முருகன் கோயில் அதை கட்டியவர் ஒரு இஸ்லாமியர் வௌ;வேறு தெய்வங்களை வழிபட்டாலும் நாம் அனைவரும் பண்பாட்டு ரீதியில் சகோதரத்துடன் வாழ்ந்து வருகிறோம். புதுச்சேரி ஆன்மிக தளமாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறோம். புதுச்சேரியில் மிகவும் பழமைவாய்ந்த கோயில்கள், சித்த சமாதிகள் உள்ளது. முருகனுக்காக முருக பக்தர்கள் அனைவரும் ஒன்று கூடி விழா ஒன்றை எடுக்கிறார்கள் அதில் பங்கேற்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் இங்கு வந்துள்ளேன் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.