ஒரே நேரத்தில் காவல் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தந்தை - மகன்! உ.பி.யில் நடந்த நெகிழ்ச்சி!
- செய்தியாளர் ராஜீவ்
உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தின் தௌலானா தாலுகாவில் உள்ள உதயராம்பூர் நங்லா கிராமத்தில் வசிக்கும் யஷ்பால், 2002 ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார் பிறகு 18 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் அவர் 2019 இல் தன்னார்வ ஓய்வு (VRS) பெற்றார்.அதனையடுத்து டெல்லியில் ராணுவ பிரிவு ஒன்றில் பணிக்கு சேர்ந்து பணியாற்றி வந்தார்.அவரது மூத்த மகன் சேகர் போலீஸ் ஆட்சேர்ப்பு தேர்வுக்குத் தயாராகி வந்தார்,
மேலும் அவரது மகனின் உறுதியால் ஈர்க்கப்பட்ட யஷ்பாலும் தேர்வுக்கு தயாராக முடிவு செய்தார். அதன்படி இருவரும் டெல்லியில் உள்ள ஒரே பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து தேர்வுக்கு தயாராக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செலவிட்டனர். அவர்கள் ஒரு நூலகத்தில் அருகருகே படித்தார்கள், ஆனால் சக மாணவர்களிடமிருந்து தங்கள் உறவை ரகசியமாக வைத்திருந்தார்கள் - அவர்கள் தந்தை மற்றும் மகன் என்று யாருக்கும் தெரியாது.பயிற்சி மையத்தில் எங்கள் இடையிலான பிணைப்பை மற்ற மாணவர்கள் யூகிக்க வில்லை என யஷ்பால் கூறுகிறார்.
இருவரும் டெல்லியில் உள்ள ஒரே பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து தேர்வுக்குத் தயாராகி,இருவரும் ஒரே நாளில் வெவ்வேறு மையங்களில் தேர்வு எழுதினர். அக்டோபரில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது, அவர்கள் இருவரும் தேர்ச்சி பெற்றனர்.இதையடுத்து இருவரும் செவ்வாய்க்கிழமை ஹாபூருக்குத் திரும்பினர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளிடமிருந்து அன்பான மற்றும் மகிழ்ச்சியான வரவேற்பு அவர்களுக்கு கிடைத்தது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரிடமிருந்து பணி நியமனக் கடிதங்களை பெற்றனர். 41 வயதான ராணுவ வீரரான யஷ்பால் நாகர் மற்றும் அவரது 20 வயது மகன் சேகர் ஆகியோர் தங்கள் பொதுவான சாதனை மூலம் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் வலுவான குடும்ப பிணைப்புகளின் அடையாளமாக உருவெடுத்துள்ளனர்.