“நன்றி வயநாடு” - தேர்தல் வெற்றி சான்றிதழை பெற்றார் பிரியங்கா காந்தி.. இனிப்பு ஊட்டி மகிழ்ந்த ராகுல்!
பிரியங்கா காந்தி நாளை மக்களவை உறுப்பினராக பதவி ஏற்க இருக்கிறார்.
இந்திய நாடாளுமன்றத்திற்கு 2024ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றிப்பெற்றார். பின் அவர் ரேபரேலியை தன் தொகுதியாக தேர்ந்தெடுத்ததால் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இதனை அடுத்து வயநாடு தொகுதி காலியானதாக அறிவித்து அப்பகுதிக்கு இடைத்தேர்தலை அறித்ததது தேர்தல் ஆணையம். அதன்படி இடைத்தேர்தலானது நவம்பர் 13ம் தேதி நடைபெற்றது இதில் அங்கு காங்கிரஸ் வேட்பாளராக களம் கண்ட ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி 4,10,931 வாக்குகளைப்பெற்று அமோக வெற்றிப்பெற்றார். தன் முதல் தேர்தலிலேயே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்றார் பிரியங்கா காந்தி.
இந்நிலையில் நாளை பதவியேற்க இருக்கும் பிரியங்கா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வயநாடு தொகுதியில் வரும் 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சமீபத்தில் வயநாடு நிலச்சரிவை பேரிடராக ஏற்கமுடியாது என்று மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து, நிலச்சரிவு நிவாரணம் வழங்குவது தொடர்பான விவகாரத்தை பிரியங்கா நாளை நாடாளுமன்றத்தில் எழுப்பலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் இன்று வயநாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர், இன்று பிரியங்கா காந்தியின் தேர்தல் வெற்றி சான்றிதழை அவரிடம் ஒப்படைத்தனர்.
இதை தன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பிரியங்கா காந்தி, “என்னைப் பொறுத்தவரை, இது வெறும் ஆவணம் மட்டுமல்ல. இது உங்களின் அன்பு, நம்பிக்கை மற்றும் நம் உறுதியின் சின்னம். உங்களுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இந்தப் பயணத்தை முன்னெடுத்துச் செல்வேன். என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி வயநாடு” என்று பதிவிட்டிருந்தார். அப்போது அவருடன் இருந்த ராகுல் காந்தி, தன் சகோதரிக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தர்.