இடைத்தேர்தல் | அசத்திய காங்கிரஸ்.. வயநாட்டிலும் பிரியங்கா காந்தி அபாரம்! வேறு எங்கெல்லாம் வெற்றி?
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல்களுடன் பிற மாநிலங்களில் காலியாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தேர்தல் நடத்தப்பட்டது. அதன் வாக்கு எண்ணிக்கையும் இன்று (நவ.23) நடைபெற்றது. அதன்படி அசாம் (5), பீகார் (4), சத்தீஸ்கார் (1), குஜராத் (1), கர்நாடகா (3), கேரளா (2), மத்தியப் பிரதேசம் (2), மேகலயா (1), பஞ்சாப் (4), ராஜஸ்தான் (7), சிக்கிம் (2), உத்தரப்பிரதேசம் (9), உத்தரகாண்ட் (1), மேற்கு வங்கம் (6) உள்ளிட்ட 48 இடங்களில் தேர்தல் நடைபெற்றது.
இதில், கர்நாடகாவில் உள்ள ஷிகாவ்ன், சாந்தூர், சன்னபட்னா ஆகிய 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. சன்னபட்னாவில் காங்கிரஸ் வேட்பாளர் சி.பி.யோகேஸ்வரா 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை தோற்கடித்தார். ஷிகாவ்ன் தொகுதியில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையின் மகன் பாரத் பொம்மை, காங்கிரஸின் யாசிர் அகமது கான் பதானிடம் தோல்வியடைந்தார். சந்தூர் தொகுதியில், பல்லாரி காங்கிரஸ் எம்பி துக்காராம் மனைவி அன்னபூர்ணா, கர்நாடக பாஜக தலைவர் பிஒய் விஜயேந்திராவின் தீவிர விசுவாசியான பாஜக வேட்பாளர் பங்காரு ஹனுமந்துவை எதிர்த்து வெற்றிபெற்றார். அவர் பாஜக வேட்பாளரை 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அதுபோல், கேரளாவில் பாலகாட்டில் மட்டும் வெற்றிபெற்றுள்ளது. மேலும் பஞ்சாப்பில் பர்னாலா தொகுதியிலும், ராஜஸ்தானில் தவுசா தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் விஜய்பூர் தொகுதியில் முன்னிலையில் உள்ளது. கேரளாவின் வயநாடு தொகுதி மக்களவை இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றுள்ளது. இந்த தொகுதியில் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, 4 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) வேட்பாளர் சத்யன் மொகேரி மற்றும் பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் ஆகியோருக்கு எதிராகப் போட்டியிட்ட பிரியங்கா 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றிருக்கிறார்.
வெற்றி குறித்து பிரியங்கா காந்தி, “வயநாட்டின் என் அன்புச் சகோதரிகளே மற்றும் சகோதரர்களே... நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் நன்றியில் மூழ்கியிருக்கிறேன். காலப்போக்கில், இந்த வெற்றி உங்கள் வெற்றியாக இருப்பதை நீங்கள் உண்மையிலேயே உணர்கிறீர்கள் என்பதையும், உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுத்த நபர் உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் புரிந்துகொண்டு உங்களுக்காக உங்களுக்காகப் போராடுவதையும் உறுதி செய்வேன். நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.