திருத்த மசோதா | மத்திய, மாநில வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் யார் யார்?
வக்ஃப் வாரியத்தில் பல்வேறு மாற்றங்களை சட்டத்தில் மேற்கொள்ளும் வகையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது. மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது. ஆனால், எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இந்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு i-n-d-i-a கூட்டணிக் கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், விவாதத்தில் பங்கேற்று தங்களின் கருத்துகளையும் பதிவு செய்தனர். வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் மக்களவையில் இந்த மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும் அதற்கு எதிராக 232 வாக்குகளும் பதிவாகின.
இந்த நிலையில், வக்ஃப் வாரிய சட்ட மசோதாவின்படி, மத்திய வக்ஃப் வாரியத்தில் மொத்தம் 22 உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். அந்த வகையில், புதிய வக்ஃப் வாரிய திருத்த மசோதாவின் அடிப்படையில், மத்திய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மத்திய வக்ஃப் வாரியம் மொத்தம் 22 உறுப்பினர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பொறுப்பு வகிப்பார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் இடம்பெறுவார்கள்.
மேலும், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 10 பேர் இடம்பெறுவார்கள் எனவும், இதில் கட்டாயம் இரண்டு பெண்கள் இடம்பெறவேண்டும் எனவும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றங்களைச் சேர்ந்த முன்னாள் நீதிபதிகள் 2 பேர் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஒருவருக்கும் இக்குழுவில் இடமளிக்கப்பட்டுள்ளது. இவைதவிர தேசிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளைச் சேர்ந்த 4 பேர் இடம்பெறுவார்கள் எனவும், கூடுதல் செயலாளர் அல்லது இணைச் செயலாளர் ஒருவர் இடம்பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல மாநில வக்ஃப் வாரியங்களுக்கு 11 உறுப்பினர்கள் வரை நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். அதன்படி மாநில வக்ஃப் வாரியத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் குழுவில் இடம்பெறுவர். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் குழுவில் இடம்பெறுவார்கள் எனவும், அதில் 2 பெண்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் எனவும் சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வணிகம், வருவாய் மற்றும் சமூக சேவை துறைகளைச் சேர்ந்த இரண்டு பேர் இடம்பெறுவார்கள் எனவும், மாநில அரசுக்கான இணைச் செயலாளர் ஒருவர் மற்றும், பார் கவுன்சில் உறுப்பினர் ஒருவரும் இக்குழுவில் இடம்பெறுவார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.