பளபளனு மின்னிய ஆறு! டிரெண்ட் ஆன 'பிட்டு டாபி' இளைஞர்! அரசு தந்த சூப்பர் அங்கீகாரம்!
செய்தியாளர் - கார்த்திகேயன்
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பயோரா பகுதியில் அமைந்திருக்கிறது அஜ்னர் ஆறு. குப்பைகளாலும், பிளாஸ்டிக் கழிவுகளாலும் நிரம்பி வழிந்துக் கிடக்கும் இந்த ஆறு, அழியும் தருவாயில் இருந்தது. ஆனால், அந்த ஆற்றுக்கு ஒரு 20 வயதான இளைஞர் தான், மீண்டும் புத்துயிர் கொடுத்து காப்பாற்றினார். அதாவது, பிட்டு டாபி என்ற அழைக்கப்படும் B.Sc பட்டம் படித்த இளைஞர் ஒருவர், அஜ்னர் ஆற்றங்கரையோரமாக இருந்த குப்பைகளை, தனது சொந்த முயற்சியின் மூலம் நீக்கியிருந்தார்.
ஆரம்பத்தில் நண்பர்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல, நண்பர்கள் குப்பை அகற்றும் பணியில் இருந்து விலகிவிட்டாலும், தொடர்ச்சியாக அதில் ஈடுபட்டார். ஒரு துளி அளவுக்கு கூட நீச்சல் அடிக்க தெரியாத போதும், ஆபத்தான ஆற்றில் இறங்கி குப்பைகளை அகற்றியதால், அவருக்கு பல்வேறு தோல் நோய்கள் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இருப்பினும், விடப்பிடியாக இருந்த அவர், தனது சொந்த பணமான 30 ஆயிரம் ரூபாயின் மூலம், உபகரணங்களை வாங்கி ஆற்றை சுத்தப்படுத்தினார். இறுதியாக, குப்பை இருந்தபோது ஆறு எவ்வாறு இருந்தது, அகற்றிய பிறகு எவ்வாறு மாறியது என்ற Before-After வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் டிரெண்டானதையடுத்து, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டு, இளைஞரை பாராட்டியிருந்தார். அதன்பிறகே பலரது கவனத்தையும் ஈர்த்த அந்த இளைஞர், நெட்டிசன்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறார். இந்நிலையில், இந்த இளைஞரை அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் அழைத்து, பொன்னாடை போர்த்தி, பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளார். மேலும், அந்த இளைஞரை.. நமது லிட்டில் பிட்டு என்று கூறி.. அதாவது நமது செல்லமான குழந்தை என்று தெரிவித்து, அன்பை வெளிப்படுத்தியுள்ளார். .

