மற்றொரு நேபாள வெள்ளமா? இந்தியாவுக்கு வரும் ஆபத்து! 16 பனி ஏரிகள் - உச்சகட்ட அபாயம்?
செய்தியாளர் - கார்த்திகேயன்
இமயமலையில் உள்ள மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால், கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி அன்று, நேபாளத்தின் கோஷி ஆற்றிலும், திரிசூலி ஆற்றிலும் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனிப்பாறை உருகி, 300 கிலோ மீட்டர் வேகத்தில் மினி சுனாமி போல் வந்த வெள்ளநீர், ஆற்றங்கரையோரமாக இருந்த பல்வேறு குடியிருப்புகளை தாக்கி, பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதுவரை இந்த விபத்தில் சிக்கி, ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதுடன், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட இந்த வெள்ள பாதிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவிலும் இப்படியான மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இமயமலைப் பகுதியில் இருந்து வரும் தீவிர பருவநிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களால், சிக்கிம் மாநிலத்தில் உள்ள பனி ஏரிகள் பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. மாநிலத்தில் உள்ள மொத்த ஏரிகளில் 40 பனி ஏரிகள் கடுமையான ஆபத்து நிறைந்தவை என்றும், 16 பனி ஏரிகள் மிகமிக உச்சகட்ட ஆபத்து நிறைந்தவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பனி ஏரிகள் வெடித்து மிகப்பெரிய வெள்ளம் வந்து, பேரழிவு நடப்பதற்கான அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அரசின் முதன்மை செயலாளர் சந்தீப் கம்பே பேசும்போது, செயற்கைக்கோள் படங்கள் மூலம், இந்த ஆபத்தான பனி ஏரிகள் கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த அபாயத்தை குறைப்பதற்காக, பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏரிகளில் உள்ள நீரின் அளவை குறைக்க, பம்பிங் முறையை கையாளுதல், செயற்கை கால்வாய்களை உருவாக்குதல், பாதுகாப்பு சுவர்களுடன் கூடிய சுரங்கங்களை அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், வெள்ள பாதிப்புகளை கணிப்பதற்காக, இந்தியாவுக்கென பிரத்யேக புதிய நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. பேரழிவுகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்க மாநிலம் முழுவதும் கூடுதல் சென்சார்களைப் பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகமும் இமயமலை மாநிலங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

