காதலரை மணந்த கும்பமேளா 'மோனலிசா'.. எதிர்த்த குடும்பம்.. கேரள போலீஸில் தஞ்சம்!
2025-ஆம் ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்றபோது எடுத்த வீடியோ வைரலானதால் சமூக ஊடகங்களில் பிரபலமான மோனலிசா போஸ்லே, தனது காதலர் ஃபர்மான் கானை இன்று கேரளத்தில் திருமணம் செய்துகொண்டார். இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மோனலிசாவின் குடும்பம் இந்த காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி பிப்.26ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. கிட்டத்தட்ட 40 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு முக்கியமான சம்பவங்கள் அரங்கேறின. இந்த கும்பமேளாவில் அழகான மயக்கும் கண்கள், ஈர்க்கும் சிரிப்பு, நம்பிக்கையான பேச்சு, எளிமையான தோற்றம் என பாசிமணி விற்கும் இளம்பெண் மோனலிசா போஸ்லே ஒரேநாளில் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலானார். தவிர, அவர் பற்றிய செய்திகளும் அனைத்து சமூக ஊடகங்களிலும் வைரலாகின.
ஒருகட்டத்தில், அவர் இதன்மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். ஒருகட்டத்தில், அவரைப் பார்த்த பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, மோனாலிசாவை தனது அடுத்த படத்தில் நடிக்க வைப்பதாக அறிவித்தார். ’டைரீஸ் ஆஃப் மணிப்பூர்’ என்ற அந்த படத்திற்காக மோனாலிசாவிக்கு ரூ.21 லட்சம் சம்பளமும் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், மோனலிசா தனது காதலரைக் கைப்பிடித்த நிலையில், பாதுகாப்பு கேரள போலீஸில் தஞ்சமடைந்துள்ளார். மத்தியப் பிரதேசம் கார்கோனில் வசிக்கும் மோனலிசாவுக்கு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் ஃபர்மான் கான் என்பவர் பழக்கமாகியுள்ளார். இது, நாளடைவில் அவர்கள் இருவருக்குள்ளும் காதலாக மலர்ந்துள்ளது. இந்தக் காதலுக்கு மோனலிசாவின் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து, இருவரும் கேரளாவில் உள்ள அருமனூர் கோயிலில் இன்று திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் பற்றிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து தங்களுக்குப் பாதுகாப்பு கோரி இருவரும் கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் தம்பனூர் காவல் நிலையத்திற்குச் சென்று தஞ்சமடைந்தனர். ஃபர்மன் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் மோனலிசாவின் தந்தை விஜய் சிங் போசலே மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிராக இருந்தனர்.
தங்களுக்கு விருப்பமான ஒரு பையனை திருமணம் செய்துகொள்ளுமாறு தனது குடும்பத்தினர் அழுத்தம் கொடுப்பதாகவும், தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும், இதன் காரணமாக தனது வீட்டைவிட்டு வெளியேறி கேரளம் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் மோனலிசா குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையே, ஆரம்பத்தில், மோனலிசா மைனர் என்று குடும்பத்தினர் கூறினர். ஆனால் காவல்துறை விசாரணையிலும் ஆவணங்களிலும் அவர் வயது வந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், மோனலிசாவின் தந்தையை வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அவருடன் மோனலிசாவை அனுப்பிவைக்க போலீசார் முடிவு செய்தபோதும், அவர் செல்ல மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

