ஹரித்வார் கும்பமேளா | ”இந்து அல்லாதவர் நுழைய கட்டுப்பாடு விதிக்கணும்” - VHP தலைவர் கோரிக்கை!
2027ஆம் ஆண்டு அர்த்த கும்பமேளாவிற்கு முன்னதாக ஹரித்வாரில் உள்ள கங்கை மலைத்தொடரில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் (VHP)தலைவர் சாத்வி பிராச்சி உத்தரகாண்ட் அரசை வலியுறுத்தியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வாக, கும்பமேளா வகைப்படுத்தப்படுகிறது. ஆன்மிகரீதியாக உற்சாகமான விழாக்களில் ஒன்றான இது, மத நம்பிக்கை மற்றும் ஆன்மா ஆகியவற்றின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. கும்பமேளாவில் 4 வகைகள் உள்ளன. கடந்த ஆண்டு ஜனவரியில் உத்தரப்பிரதேசத்தின் பிரக்யாராஜில் மகா கும்பமேளா களைகட்டியது. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் சங்கமமான திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராடி தன் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், 2027ஆம் ஆண்டு அர்த்த கும்பமேளா ஹரித்வாரில் கொண்டாடப்பட இருக்கிறது.
6 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுவது அர்த்த கும்பமேளாவாகும். 'அர்த்' என்றால் பாதி என்று பொருள், எனவே இது இரண்டு 'பூர்ண கும்பங்களுக்கு' இடையில் அமைந்துள்ளது. அர்த்த கும்பமேளா என்பது பக்தர்களை பூர்ண கும்பத்திற்கு தயார்படுத்தும் ஒரு பெரிய அளவிலான கூட்டமாகும். இது ஹா மற்றும் பிரயாக்ராஜில் நடைபெறுகிறது. 45 நாட்கள் நடைபெறும் அர்த்த கும்பமேளா, 2027 ஜனவரி 14ஆம் தேதி மகர சங்கராந்தி அன்று தொடங்கி, மகா சிவராத்திரி அன்று முடிவடையும். இந்த நிகழ்வின் போது ஆறு முதல் ஏழு கோடி பக்தர்கள் ஹரித்வாருக்கு வருகை தருவார்கள் என்று மாநில அரசு எதிர்பார்க்கிறது.
இதையடுத்து, பாதுகாப்பு கவலைகள் மற்றும் நகரத்தின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைக் காரணம் காட்டி, 2027ஆம் ஆண்டு அர்த்த கும்பமேளாவிற்கு முன்னதாக ஹரித்வாரில் உள்ள கங்கை மலைத்தொடரில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் (VHP)தலைவர் சாத்வி பிராச்சி உத்தரகாண்ட் அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், “கும்பமேளா பகுதி மற்றும் ஹர்-கி-பௌரியை ’அம்ரித் க்ஷேத்ரா’ (பகுதி) என்று அறிவிக்க வேண்டும். டெல்லியைச் சேர்ந்த சில பெண்கள் சமீபத்தில் ஹரித்வாருக்கு வந்து தீங்கிழைக்கும் நோக்கத்துடன் புனித நீராடினர் என்பதை நான் சமீபத்தில் அறிந்தேன். இதுபோன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
கும்பமேளா பகுதிக்குள் ஜிஹாதி கூறுகள் நுழைவதைத் தடுக்க ஒரு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அப்பகுதியில் இந்துக்கள் அல்லாதவர்கள் சொத்து வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். மெக்கா, மதீனா போன்ற இடங்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீதான கட்டுப்பாடுகளுக்கு இணையாக, ஹரித்வாருக்கும் இதே போன்ற விதிமுறைகள் பொருந்த வேண்டும். ஹரித்வார் மற்றும் நாகர் பாலிகா பகுதிகளில், இந்துக்கள் பண்டிகைகள் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் நடக்க வேண்டும். கும்பமேளாவை ' அமிர்த க்ஷேத்திரம் ' என்று அறிவித்து, யாத்ரீகர்களின் நலனுக்காக அத்தகைய விதிமுறைகளை அமல்படுத்த உத்தரகாண்ட் அரசுக்கு திறன் உள்ளது” என்றும் அவர் வலியுறுத்தினார்.

