ஒரு ‘கமா’ மாறிப் போனதால் ஒரு வியாபாரி உயிரே பறிபோனது
ஒரு மாதத்திற்கு மின் கட்டணமாக ரூபாய் 8 லட்சத்தை மின்சார வாரியம் செலுத்த சொன்னதால், பதறிப்போன வியாபாரி ஒருவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்தை சேர்ந்தவர் ஜகன்நாத். காய்கறி வியாபாரியாக உள்ளார். இவர் வீட்டுக்கு கடந்த மாதம் மின் கட்டணத்தை செலுத்துவதற்கான பில் வந்துள்ளது. அதனைக் கண்ட ஜகன்நாத் அதிர்ச்சி அடைந்தார். காரணம் மார்ச் மாத மின் கட்டணமாக ரூபாய் 8 லட்சத்து 64 ஆயிரத்தை செலுத்துமாறு ரசீதில் குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கமாக ஆயிரம் ரூபாய் மட்டுமே மின் கட்டணமாக செலுத்தி வந்த நிலையில் இந்த மாதம் மட்டும் ஏன் இவ்வளவு தொகை வந்தது என தெரியாமல் திணறிய ஜகன்நாத், அருகிலிருந்த அலுவலகத்திற்கு ஓடியிருக்கிறார். ஆனால் அங்கு அவருக்கு முறையான பதில் இல்லை எனத் தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த ஜகன்நாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜகன்நாத்தின் மரணத்திற்கு பின்னர் தான் மின்சார வாரியத்தின் அலட்சியமும் தெரியவந்துள்ளது. அதாவது ஜகன்நாத் வீட்டில் கடந்த மாதம் செலவு செய்யப்பட்ட மின்சாரத்தின் அளவு வெறும் 6117.8 யூனிட். அதற்கான கட்டணம் என்று பார்த்தால் ரூபாய் 2,803. ஆனால் மின்வாரிய ஊழியரின் தவறால் ஜகன்நாத் வீட்டில் செலவு செய்யப்பட்ட மின்சாரம் 61,178 யூனிட் என குறிப்பிடப்பட்டு அதற்கான கட்டணமாக 8 லட்சத்து 64 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
‘நான் வழக்கமாக ஆயிரம் ரூபாய் தான் மின் கட்டணமாக செலுத்துவேன். ஆனால் இந்த முறை 8 லட்சம் ரூபாய் அளவில் மின் கட்டணம் வந்துள்ளது. இதனால் எனக்கு என்ன செய்வதேன்றே தெரியவில்லை. அதனால் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்” என தற்கொலை கடிதத்தையும் ஜகன்நாத் விட்டுச் சென்றிருக்கிறார். சம்பவம் தொடர்பாக ஒருவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.