உ.பி. | தேர்வு முறைக்கு எதிர்ப்பு.. 4 நாட்களாக தொடரும் மாணவர் போராட்டம்.. எதிர்க்கட்சிகள் கண்டனம்!
4 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள்
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு மற்றும் பிராந்திய குடிமை பணித்தேர்வுகள் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு, மூன்று ஷிஃப்டுகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தேர்வுகளை ஒரேநாளில் ஒரே ஷிஃப்ட்டில் நடத்த வலியுறுத்தி நான்காவது நாளாக இன்று, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பிரயாக்ராஜில் உள்ள அரசு பணியாளர் தேர்வாணையம் அலுவலகம் முன்பு திரண்ட மாணவர்கள், போலீசாரின் தடுப்புகளைத் தாண்டிச் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் இழுத்துச் சென்றனர். வன்முறையில் ஈடுபட்டதாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே மாணவர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வருமாறு துணை முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். மாணவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து ஒரே ஷிஃப்ட்டில் தேர்வு நடத்த வேண்டும் என சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
மாணவர்களின் போராட்டத்திற்கு என்ன காரணம்?
கடந்த நவம்பர் 5ஆம் தேதி, UPPSC (Uttar Pradesh Public Service Commission - உத்தரப்பிரதேசத்தின் அரசுத்தேர்வுகளுக்கான ஆணையம்) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “ஒரு தேர்வுக்கான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைத் தாண்டினால், அது பல ஷிப்டுகளில் நடத்தப்படும். அந்த வகையில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுடன், RO/ARO தேர்வு, மூன்று ஷிப்டுகளாக டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும். PCS முதல்நிலைத் தேர்வு, 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுடன், டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்படும். மேலும், 41 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும்” எனக் கூறியிருந்தது.
நியாயமான தேர்வு செயல்முறையை உறுதி செய்வதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதாக அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்தே, மாணவர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரே தேர்வு வெவ்வேறு நாட்களில் நடத்தப்படும்போது, வினாத்தாள்கள் மாறுபடலாம் என்கிற ரீதியில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, ஒரே நாளில் தேர்வு நடத்தப்பட்டு, தனியார் பள்ளிகளும் தேர்வு மையங்களாக நியமிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒவ்வொரு ஷிப்டிலும் ஒப்பீட்டு செயல்திறன் அடிப்படையில், கணினி மூலம் தேர்வாளர்கள் மதிப்பீடு செய்யப்படுவார்கள் என UPPSC கூறியிருந்தது. ஆனால், நடப்பாண்டு மார்ச் மாதம், வினாத்தாள் கசிவு புகார் காரணமாக பிப்ரவரியில் நடைபெற்ற RO மற்றும் ARO முதல்நிலை தேர்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் சொல்வது என்ன?
இதுகுறித்து யுபிபிஎஸ்சி செயலாளர் அசோக் குமார், “அரசு கல்வி நிறுவனங்களை மட்டுமே தேர்வு மையங்களாக மாற்ற வேண்டும் என்பதும் தலைமைச் செயலகத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் மையம் இருக்க வேண்டும் என்பதும் ஆணையத்தின் வழிகாட்டுதலாகும். முன்னதாக, தாள் கசிந்தபோது, இந்த மாணவர்கள் தனியார் நிறுவனங்கள் கோரிக்கையை எழுப்பினர். மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தபோது இவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். பிசிஎஸ் தேர்வுக்கு 5,76,000 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். இரண்டு நாட்கள் தேர்வு நடத்துவது கட்டாயம்'' என்றார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின்மீது உ.பி. அரசு மோசமான அணுகுமுறை; ஒரே ஷிப்ட்டில் தேர்வு நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. கல்வி முறையை சீரழிப்பதில் பாஜக அரசு மும்முரமாக உள்ளது. பாஜக அரசின் அலட்சியப் போக்கிற்கு மாணவர்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? உ.பி. மாணவர்களின் கோரிக்கைகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “மாணவர்களின் இந்த எழுச்சி பாஜகவின் வீழ்ச்சியாக இருக்கும். வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமல் பல ஆண்டுகளாக தேர்வுகள் தாமதமாகி வருவதால் இளைஞர்கள் விரக்தியும், கோபமும் அடைந்துள்ளனர்” என தெரிவித்தார்.