உ.பி. | உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு நேர்ந்த கொடூரம்.. வார்த்தைகளால் சொல்ல முடியாத நிகழ்வு
உத்தரப்பிரதேசத்தில் உடல்நலத்தால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர், கோயில் அருகே சிறுநீர் கழித்துள்ளார். இதைப் பார்த்த உயர்சாதியைச் சேர்ந்த ஒருவர், அதை நக்கவைத்து சித்திரவைதை செய்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
என்னதான் இந்தியாவில் கடுமையான சட்டங்களும் தண்டனைகளும் இருந்தாலும் சாதிய ரீதியான தாக்குதல்கள் மட்டும் அவ்வப்போது நாடு முழுவதும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம்தான் தற்போது உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கக்கோரி என்ற இடத்தில் சீத்தலா மாதா கோவில் ஒன்று உள்ளது. அந்த வழியாக 65 வயதான ராம்பால் என்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்த முதியவர் நடந்து சென்றுள்ளார். அப்போது, கடுமையான உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த ராம்பாலுக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து, கோவில் அருகே அவரை அறியாமல் சிறுநீர் கழித்துள்ளார்.
அதைப் பார்த்து கோபமடைந்த அதே பகுதியில் நகைக்கடை வைத்திருக்கும் உயர்சாதி பிரிவைச் சேர்ந்த சுவாமி காந்த் என்பவர், ராம்பாலை அடித்து துன்புறுத்தியதுடன் தெருவில் இருந்த சிறுநீரை நக்கவைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். பிறகு அந்த முதியவரை வைத்து தண்ணீரை ஊற்றி அந்த இடத்தைச் சுத்தப்படுத்தி உள்ளார். இதனால், அவமானப்பட்ட அந்த முதியவர், சம்பவம் குறித்து தனது பேரனிடம் தெரிவித்துள்ளார். அதற்குள் இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. முதியவரின் பேரன், தனது தாத்தாவுக்கு மூச்சுத் திணறல் இருப்பதாகவும், இருமும்போது தற்செயலாக சிறுநீர் கழிக்கும் பாதிப்பு இருப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், தாத்தாவுக்கு எதிராக சாதிய வார்த்தைகளை அந்த நபர் பேசியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச காவல்துறை சுவாமி காந்த் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதுடன், கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து உத்தரப்பிரதேச மூத்த காங்கிரஸ் தலைவர் அனில் யாதவ், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தை (ஆர்எஸ்எஸ்) சேர்ந்தவர். உத்தரப்பிரதேசத்தில் இதுதான் தலைவிதி. அங்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) மற்றும் பட்டியல் சமூகத்தினர் எல்லா வழிகளிலும் அவமானப்படுத்தப்படுகிறார்கள். இது மனிதகுலத்திற்கு மட்டும் அவமானமல்ல, அரசியலமைப்பின் சாரத்தின் மீதான தாக்குதலும்கூட” எனத் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், ”இந்த சம்பவம் நமது சமூகத்தின் மீது ஒரு களங்கம். மனிதநேயம் சாதி மற்றும் மதத்திற்கு அப்பாற்பட்டது. அவரது நீதிக்கான போராட்டத்தில் ஆம் ஆத்மி அனைத்து ஆதரவையும் வழங்கும்” எனத் தெரிவித்தார்.

