உ.பி | தொடர்ந்து 5 நாட்கள் டிஜிட்டல் அரெஸ்ட்.. மோசடியில் பறிபோன ரூ.1 கோடி! விழிப்புணர்வு என்ன ஆச்சு?
உலகம் முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் ஆன்லைன் உலகைச் சொல்லவே வேண்டாம். குற்றங்களுக்குப் பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. குற்றம் செய்பவர்கள் புதுப்புது யுக்தியினை கையாண்டு மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர்.
அந்த வகையில், ’டிஜிட்டல் அரெஸ்ட்’ ஒன்றாக உள்ளது. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் பலிகடாவாகி உள்ளது. பாதிக்கப்பட்ட சந்திரபன் பாலிவால் காவல் துறையில் அளித்துள்ள புகாரின் மூலம் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து காவல் துறையினர், “பிப்ரவரி 1ஆம் தேதி தெரியாத எண்ணிலிருந்து சந்திரபன் பாலிவாலுக்கு ஓர் அழைப்பு வந்துள்ளது. அவர், சந்திரபனை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவரது சிம் கார்டு கைப்பற்றப்படும் என எச்சரித்துள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு பேசிய அந்த அழைப்பாளர், ’இதுகுறித்து உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மும்பையில் உள்ள சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரி என்று கூறிக்கொண்ட ஒருவர் மும்பையின் கொலாவா காவல் நிலையத்திலிருந்து பாலிவாலுக்கு வீடியோ அழைப்பு செய்துள்ளார். அப்போது அவர், ‘உங்கள் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், பணமோசடி தொடர்பாக சிபிஐ உங்களைத் தொடர்ந்து விசாரித்து வருகிறது’ என மிரட்டியுள்ளார். மேலும், ’உங்கள் வழக்கை ரத்து செய்ய வேண்டுமானால் ரூ. 1.10 கோடி செலுத்த வேண்டும். இல்லையெனில், விரைவில் கைது செய்யப்படுவீர்கள்’ என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சந்திரபன் 5 நாட்களில் அந்த தொகையைச் செலுத்தியுள்ளார். அதன்பேரில், தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் கைது மோசடிகள் என்றால் என்ன?
முன்னதாக, இதேபோன்ற ஒரு மோசடியில், ஐஐடி டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ.4.33 லட்சத்தை இழந்துள்ளார். எனினும், இந்த வழக்கில் மதன் லால் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார் எனக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள், சட்ட விரோதமான பொருட்கள், போதைப் பொருட்கள், போலி கடவுச்சீட்டுகள் அல்லது பிறவற்றைக் கொண்ட பார்சல்களை அனுப்பியதாக அல்லது அனுப்புவதாகக் கூறி அழைப்பாளருடன் அழைப்பைப் பெறுவார்கள்.
வேறு சில சந்தர்ப்பங்களில், மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைத்து, பாதிக்கப்பட்டவர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்று கூறுவார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவரை வீடியோ அழைப்பின்மூலம் குறிவைத்து, சீருடை அணிந்து, சட்ட அமலாக்கப் பிரிவினர் எனக் கூறி, வழக்கை முடிக்க பணம் கோருவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஏமாந்து பணத்தை இழக்கிறார்கள். ஆகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதே டிஜிட்டல் கைது மோசடிகள் ஆகும்.