உத்தரகாண்ட் | திடீரென பயங்கர மேகவெடிப்பு.. அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ!
உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட மேகவெடிப்பு.. அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்
இந்தியாவின் வடமாநிலங்களில் ஒன்று உத்தரகாண்ட். இந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக, ஹரித்வாரில் உள்ள கங்கை உள்ளிட்ட முக்கிய ஆறுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. நேற்று, ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மலைப்பகுதியில் இருந்து விழுந்த பாறைகள் மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் இரண்டு கடைகள் புதைந்தன. முன்னதாக, இம்மாநிலத்தில் இன்று மிக அதிக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) 'சிவப்பு' எச்சரிக்கை விடுத்துள்ளது. வாரம் முழுவதும் கனமழை பெய்யும் என 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை கங்கோத்ரிக்குச் செல்லும் வழியில் உள்ள தாராலியின் உயரமான கிராமங்களில் மேகவெடிப்பு காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டது. கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் எங்காவது ஏற்பட்ட மேக வெடிப்பின் விளைவாக திடீர் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இதனால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. உத்தரகாஷியில் உள்ள தாராலி (கங்கோத்ரிக்குச் செல்லும் வழியில் உள்ள தாராலி ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் தாயகமாகும்) கிராமத்தை நோக்கி ஒரு மலையிலிருந்து கீழே பாய்ந்து வரும் பலத்த வெள்ளம், பல வீடுகளை அடித்துச் செல்கிறது. இதனால் பதற்றத்தில் மக்கள் அலறியடித்தபடி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடுகின்றனர். இந்த காட்சிகள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மேலும் இந்த விபத்தில் நான்கு பேர் இறந்திருப்பதாகவும், 50 பேர் வரை மாயமாகி இருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்பு நடவடிக்கைகளில் உத்தரகாண்ட் அரசு
இதுகுறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி, “தாராலி (உத்தரகாஷி) பகுதியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெரும் சேதம் குறித்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. SDRF, NDRF, மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற தொடர்புடைய குழுக்கள் போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இதுதொடர்பாக, நான் மூத்த அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். மேலும் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. அனைவரின் பாதுகாப்பிற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
உத்தரகாண்டில் உள்ள மாட்லியில் நிறுத்தப்பட்டுள்ள 12வது பட்டாலியனில் இருந்து 16 பேர் கொண்ட இந்தோ-திபெத்திய எல்லை காவல்படை (ITBP) குழு தாராலியை அடைந்துள்ளது. அதே நேரத்தில் அதே பலம் கொண்ட மற்றொரு பிரிவும் மேகவெடிப்பு இடத்திற்கு விரைந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர்வாசிகள் ஆற்றங்கரைகளில் இருந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவும், குழந்தைகள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேகவெடிப்பு என்றால் என்ன?அது எப்படி ஏற்படுகிறது?
பெரும்பாலும் மலைப்பாங்கான பிரதேசங்களில் ஏற்படும் இயற்கை நிகழ்வாக மேகவெடிப்பு பார்க்கப்படுகிறது. சுமார் 20 முதல் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கு மேல் மழைப்பொழிவு ஏற்பட்டால் அது மேக வெடிப்பு எனக் கணக்கிடப்படுகிறது. பருவமழைக் காலங்களில், கனமான தண்ணீர் துளிகளுடன் மேகம் தவழ்ந்து வரும்பொழுது தரையிலிருந்து மேல் எழும்பும் வெப்பமான காற்று மழைத்துளி விழுந்துவிடாத வண்ணம் தடுக்கும். கிட்டத்தட்ட மேகத்தின் வெளியே வந்துவிட்ட நீரை மீண்டும் மேகத்திற்கு உள்ளேயே இந்த வெப்பக்காற்று அனுப்பும். இவ்வாறு கனமான தண்ணீர் துளிகளை மேகத்திற்கு அனுப்பும் வெப்பக்காற்று அழுத்தமே ஒரேநேரத்தில் மொத்தமாக மழையை கொட்டச் செய்துவிடும். இதனால் துளித் துளியாய் அல்லாமல், அருவி போல மழைநீர் கொட்டுவதால் அதன் வீரியமும் வேகமும் மிக அதிகமாக இருக்கும்.
இதனுடன் காற்றின் வேகம் போன்றவை சேரும்போது அதன் வீரியம் மேலும் அதிகரிக்கும். இதனால்தான் மேக வெடிப்பால், திடீர் வெள்ளப்பெருக்கு கடுமையான நிலச்சரிவு மற்றும் அதிக அளவிலான இடிமின்னல் போன்றவை ஏற்பட்டு சில மணி நேரங்களில் பெரும் சேதங்கள் ஏற்படுகின்றன. இந்திய வானிலையை பொறுத்தவரை இத்தகைய வெடிப்புகள் பெரும்பாலும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்தான் நிகழ்ந்துள்ளன. இத்தகைய மேகவெடிப்புகள் எப்போது எங்கு நிகழும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட முடியாது என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். இத்தகைய மேகவெடிப்பே உத்தரகாண்ட்டில் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.