உத்தரகாண்ட் வன்முறை; அடைக்கப்பட்ட சாலைகள்; மாவட்டம் முழுவதும் ஊரடங்கு; பதற்றத்தில் மாநிலம்

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது; வன்முறை கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரகாண்ட்
உத்தரகாண்ட்pt web

இமயமலையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள ஹல்த்வானி பகுதி, உத்தரகாண்ட் மாநிலத்தின் குமாவோன் பகுதிக்கான நுழைவுவாயிலாகும். வளமான கலாசாரம், பாரம்பரியம், ஆன்மிகம் என பல விஷயங்களை கொண்ட கலவையான நகரமாகும். கௌலா அணைக்கட்டு, காளி சௌர் ஆலயம், ஹெடேகன் ஆசிரமம் என பல சுற்றுலாப்பகுதிகளைக் கொண்ட ஹல்த்வானி தற்போது கலவரத்தால் பற்றி எரிகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ஹல்த்வானியில் ஆக்கிரமிப்பு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறப்படும் மதராஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.

இந்த வன்முறையில் 100 போலீசார் உட்பட 250க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். முதலில் இறப்பு எண்ணிக்கை 4 ஆக அறியப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இறப்பு எண்ணிக்கை 2 என தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியில் வன்முறை செயலில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். இணைய வசதியும் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் வன்முறை வெடிக்காமல் இருக்க அந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவும் அமலான நிலையில், அந்த மாவட்டத்திற்குள் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. அதேசமயத்தில் நைனிடால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, உயர்மட்ட கூட்டத்திற்கு தலைமை தாங்கி அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். கூட்டத்தில், மாநிலத்தில் தற்போது உள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

வன்முறைக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, சுமார் 100 ஆண்டுகளாக ஹல்த்வானி நகரின் கபூர் பஸ்தி, தோலக் பஸ்தி, இந்திரா நகர், பான்புல்புரா ஆகிய பகுதிகளில் சுமார் 4000-க்கும் அதிகமான இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதி ரயில்வே துறைக்கு சொந்தமானது என 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரகாண்ட் நீதிமன்றம் அறிவித்ததுடன், ஒரு வாரத்திற்குள் அனைவரும் அப்பகுதியிலிருந்து காலி செய்ய வேண்டும் என்றும், செய்யாவிடில் வலுக்கட்டாயமாக காலி செய்யப்படுவீர்கள் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஏற்கெனவே அப்பகுதி மக்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், வழக்கு விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கிடையில், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகக் கூறி, பலத்த போலீஸ் மற்றும் மாகாண ஆயுதப்படை ( Provincial Armed Constabulary) பாதுகாப்புடன், அரசு அதிகாரிகள் குழு இப்பகுதியில் உள்ள மதராஸாவை புல்டோசர் கொண்டு இடித்தது.

நகராட்சி ஆணையர் பங்கஜ் உபத்யாய் முன்னிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் பெண்கள் உட்பட அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். ஆனால் மூத்த போலீஸ் சூப்பிரண்டு பிரஹலாத் மீனா இது குறித்து கூறுகையில், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தில் மதராஸாவும், மசூதியும் இருந்ததாகவும், நீதிமன்றத்தின் உத்தரவுப்படியே இடிப்புகள் நடந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

ஒருக்கட்டத்தில் இது கைகலப்பாக மாறி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் மீதும், நகராட்சி ஊழியர்கள் மீதும் அப்பகுதி மக்கள் கற்கள் வீசினர். இதன்காரணமாக காவல்துறையினர் லேசான தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் கும்பலை கலைக்க முயற்சித்தனர். ஆனாலும், காவல்துறையினரின் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது. பிப்ரவரி 8 ஆம் தேதி மாலை பதற்றம் மேலும் அதிகரித்த நிலையில், பன்பூல்பூரா காவல்நிலையமும் தீவைக்கப்பட்டது.

வன்முறை குறித்து முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், சமூக விரோதிகள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். அமைதியை நிலைநாட்ட கூடுதல் போலீசார், மத்தியப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அந்த மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங் கூறுகையில், வன்முறையில் அப்பகுதி காவல் நிலையம் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் வகுப்புவாதமானது அல்ல. இதை வகுப்புவாதமாகவோ, உணர்ச்சிகரமானதாகவோ ஆக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஆக்கிரமிப்பு அகற்றம் எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல, இதனால் ஏற்பட்ட வன்முறை அரசு இயந்திரம், மாநில அரசு மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு சவால் விடும் முயற்சி எனத் தெரிவித்துள்ளார்.

அதேசமயத்தில், மதராஸாவை இடிப்பதை நிறுத்தக்கோரிய பொதுநல வழக்கு உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஹல்த்வானி முனிசிபல் கார்ப்பரேசன் வழங்கியுள்ள நோட்டீசை எதிர்த்து, மாலிக் காலணியில் வசிக்கும் சஃபியா மாலிக் உள்ளிட்ட பலரும் இந்த பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தனர். இருப்பினும் நீதிபதி பங்கஜ் புரோஹித் தலைமையிலான விடுமுறை கால அமர்வு இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இவ்வழக்கு மீண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com