உத்தராகண்ட் | குளிரை தணிக்க மூட்டிய நெருப்பு.. எமனாக மாறிய அவலம்!
உத்தராகண்ட் மாநிலம் பிலங்கனா பகுதியில் துவாரி - தப்லா கிராமத்தில்தான் கடந்த வியாழன்கிழமை ஒரு பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்...
52 வயதான மதன் மோகன் செம்வால் மற்றும் 48 வயதான அவரது மனைவி யசோதா தேவி.. இவர்கள் இருவரும் திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக துவாரி - தப்லா கிராமத்திற்கு சென்றுள்ளனர். சரியாக இரவு 11 மணியளவில் கடும் குளிர் ஏற்பட்டதால், தங்கியிருந்த வீட்டினுள்ளேயே நெருப்பு மூட்டியுள்ளனர். அப்படியே கதவை நன்றாக தாழிட்டு உறங்கியுள்ளனர்.
பின்னர், வெள்ளிக்கிழமை காலையன்று, செம்வால் மற்றும் யசோதா தேவியின் மகன் அவர்களை எழுப்புவதற்காக சென்றுள்ளார். ஆனால், அவர்கள் கதவை திறக்கவில்லை. வெகு நேரத்திற்கு பிறகும் கதவு திறக்கப்படாததால், உள்ளூர் வாசிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தம்பதிகள் இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.
வீட்டின் உள்ளே வைக்கப்பட்ட நெருப்பிலிருந்து வந்த புகையால் உருவாகும் கார்பன் மோனாக்சைடால்தான் இருவரும் மூச்சுத்திணறி இறந்துள்ளனர் என்று இறுதியில் கண்டறியப்பட்டது. இதுகுறித்தான தகவல்கள் எதுவும் அப்பகுதி காவல்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை.
இதனையடுத்து, கட் பகுதியில் வைத்து இருவரின் உடல்களும் தகனம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இறந்த செம்வால் அரசு இடைக்கல்லூரியில் க்ளர்க்காக பணியாற்றி வந்தார் என்பது கூடுதல் தகவல்.