50 கி.மீ. கடக்க 12 மணி நேரம்.. கும்பமேளா செல்லும் பாதையில் வரிசைக்கட்டி காத்திருக்கும் வாகனங்கள்!
உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது.
40 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த திரிவேணி சங்கமத்தில், உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர். இதற்கிடையே, கடந்த ஜனவரி 29ஆம் தேதி தை அமாவாசையை முன்னிட்டு, இதன் எண்ணிக்கை அதிகமானது.
இதனால், கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். என்றாலும், மகா கும்பமேளாவுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 44 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். இன்று மட்டும் 46 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜுக்கு செல்லும் வழியில் 300 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக் கிழமையையொட்டி, லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுத்தனர்.
இதனால் உத்தரப் பிரதேச எல்லை வரை சுமார் 200 முதல் 300 கிலோமீட்டருக்கு வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிரயாக்ராஜுக்குள் சாலை மார்க்கமாக வர வேண்டும் என் போலீசார் அறிவுறுத்தியுள்ள நிலையில், அந்நகரை இணைக்கும் வாரணாசி, ஜான்பூர், மிர்சாபூர், கௌசாம்பி, பிரதாப்கர், ரேவா மற்றும் கான்பூர் ஆகிய அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் வாகனங்களின் நீண்டவரிசையில் காத்து நிற்கின்றன.
வாரணாசி, லக்னோ மற்றும் கான்பூரிலிருந்து பிரயாக்ராஜ் செல்லும் பாதைகளில் 25 கி.மீ வரை நெரிசல் ஏற்பட்டுள்ளது. மெகா கும்பமேளா நடைபெறும் நகரத்திற்குள்கூட, சுமார் ஏழு கிலோமீட்டர் நெரிசல் காணப்படுகிறது. ரேவா மாவட்டத்தில் உள்ள சக்காட்டில் கட்னி பகுதியில் இருந்து மத்தியப் பிரதேச- உத்தரப் பிரதேச எல்லை வரை 250 கிமீ தூரத்திற்கு மோசனமான வாகன நெரிசல் நிலவுகிறது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போலீசாரைத் தவிர, துணை ராணுவப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள், “48 மணி நேரமாக சாலையில் சிக்கியிருக்கிறோம். வெறும் 50 கி.மீ. தூரத்தை கடக்க கிட்டத்தட்ட 10-12 மணி நேரம் ஆகிறது" என்கின்றனர்.
கும்பமேளா நடைபெறும் இடத்தை அடைய அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் முயற்சிப்பதால் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (போக்குவரத்து) குல்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
பிரயாக்ராஜில் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக உத்தரபிரதேச அரசை சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். ”இது நகரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.