மகா கும்பமேளா உயிரிழப்பு | ”இது பெரிய சம்பவமே அல்ல” - பாஜக எம்பி ஹேம மாலினி!
உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. 40 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நிகழ்விற்கு, 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர்.
இதற்கிடையே, கடந்த ஜன.29ஆம் தேதி தை அமாவாசையை முன்னிட்டு, இதன் எண்ணிக்கை அதிகமானது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. மெளனி அமாவாசை என்பதால் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூடியதும், தடுப்புகளை உடைத்து திரிவேணி சங்கமத்தை நோக்கி, பக்தர்கள் பெருமளவில் திரண்டு சென்றதாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்த துயர நிகழ்வு குறித்து நீதி விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மறுபுறம், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், ”கும்பமேளா கூட்ட நெரிசலில் மக்கள் இறந்தது அவ்வளவு பெரிய சம்பவம் அல்ல” என பாஜக எம்பியும் நடிகையுமான ஹேம மாலினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”இந்த விவகாரம் மிகைப்படுத்தப்படுகிறது. நான் அங்குச் சென்று நன்றாக நீராடினேன். எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்தன. ஏராளமான மக்கள் வரும்போது, கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படவே செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.