உ.பி : 80 தொகுதிகளுக்கும் குறி வைக்கும் பாஜக; BSPயின் முடிவு யாருக்கான ஆதரவு? காங். நிலை என்ன?

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என அனைத்து கட்சிகளும் தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அனைத்து விஷயங்களிலும் தீவிரமாக தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றன.
உத்தர பிரதேசம் அரசியல்
உத்தர பிரதேசம் அரசியல்pt web

தற்போது, நாட்டின் பரபரப்பான மாநிலங்களில் ஒன்று உத்தரப்பிரதேசம். அயோத்தி ராமர் கோவில், கிருஷ்ணஜென்ம பூமி விவகாரம், ஞானவாபி மசூதி விவகாரம் என பரபரப்புடனே காணப்படுகிறது. மாநிலத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளும் 80 மக்களவை தொகுதிகளும் உள்ள நிலையில், அனைத்தையும் தன்வசமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது பாஜக.

2019 முடிவுகள்

2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 62 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. 2014 தேர்தலை விட 9 தொகுதிகள் குறைவு என்றபோதும் அதன் வாக்கு சதவீதம் என்பது 50% ஆக உயர்ந்தது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி மகாபந்தன் எனும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதில் பகுஜன் சமாஜ் மொத்தம் 10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி முந்தைய தேர்தலைப் போலவே 5 தொகுதிகளிலும் வெற்றி வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் 1 தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது.

INDIA கூட்டணி

இது ஒருபுறம் இருக்க இன்னும் 2 மாதங்களுக்குள் பொதுத்தேர்தல். இந்துத்துவா, தேசியவாதம், மாநிலத்தில் மூலை முடுக்குகளில் ஊடுருவி இருக்கும் மோடி - யோகி முகங்கள். இவற்றை எதிர்த்துதான் உத்தரபிரதேசத்தின் எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிட இருக்கின்றன.

இத்தகைய சூழலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிற கூட்டணிகள் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீட்டை அறிவிக்கும் முன் INDIA கூட்டணியிலுள்ள காங்கிரஸ் சமாஜ்வாதி கட்சி தங்களுக்கிடையே தொகுதிப்பங்கீட்டை உறுதி செய்தது. இருகட்சிகளுக்கும் இடையே இருந்த சிக்கல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேராவின் தலையீட்டிற்குப் பின்பே முடிவுக்கு வந்தது. மொத்தமுள்ள 80தொகுதிகளில் காங்கிரஸ் 17 தொகுதிகளில் போட்டியிடும். மீதமுள்ள 63 தொகுதிகளில் சமாஜ்வாதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணியின் பிற கட்சிகள் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமாஜ்வாதி

அம்மாநிலத்தில் தற்போதைய கட்சிகளில் மிக முக்கியமான எதிர்க்கட்சி சமாஜ்வாதி. மாநிலத்தில் 20 முதல் 25 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சியை விட மேலான நிறுவன அமைப்பைக் கொண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இஸ்லாமிய மற்றும் யாதவர் சமூக மக்களது வாக்குகளைப் பெறுவதில் வெற்றி பெற்றிருந்தாலும், அது இஸ்லாமிய - யாதவ் சமூக கட்சியாக கருதப்படுவதால் பிற ஓபிசி மக்களது வாக்குகளையும் தலித் சமூக மக்களது வாக்குகளையும் ஈர்ப்பதில் சிக்கல் இருப்பதாக் CSDS தரவுகள் தெரிவிக்கின்றன. மாநிலத்தில் இஸ்லாமிய மக்கள் 20% என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க மாநிலத்தில் 50%க்கும் அதிகமான மக்கள் ஓபிசி பிரிவினைச் சேர்ந்தவர்கள். அவர்களது வாக்குகளில் பெரும்பான்மையான வாக்குகளை பாஜக தன்வசம் வைத்திருந்தாலும், விவசாயிகள் போராட்டம், விலை உயர்வு போன்றவற்றில் ஆளும் அரசுக்கு எதிரான வாக்குகள் அதிகமாக இருப்பதால் அதை தன்பக்கம் இழுக்கும் முயற்சியிலும் சமாஜ்வாதி இறங்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த கருத்துக்கணிப்புகள், அப்போதைய தேர்தலில் இஸ்லாமிய மக்கள் மகாபந்தன் கூட்டணிக்கு வாக்களித்திருந்தாலும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிப்போம் என கூறியிருந்ததாக தெரிவித்திருந்தது.

காங்கிரஸ், சமாஜ்வாதி என இரு கட்சிகளும் முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் 23 தொகுதிகளில் பாஜகவிற்கும் சமாஜ்வாதிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ்

ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை, கர்நாடக தேர்தலில் வெற்றி போன்றவற்றின் மூலம் சற்றே உற்சாகமாக இருந்த காங்கிரஸ் ஐந்து மாநில தேர்தல் தோல்வியின் மூலம் மீண்டும் பழைய நிலைக்கு சென்றுள்ளது. பட்டியலின மக்கள், ஓபிசி மக்களில் ஒரு பகுதியினர், இஸ்லாமிய மக்கள் என குறிப்பிட்ட வாக்குசதவீதத்தை தன் பக்கம் வைத்திருந்த காங்கிரஸ், மாநிலத்தில் மாநில கட்சிகளின் எழுச்சியால் மெல்ல மெல்ல தேயத்தொடங்கியது.

மக்களவைக்கு அதிகமான எம்.பி.க்களை அனுப்பும் மாநிலமொன்றில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக ஆதிக்கம் செலுத்தினாலும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி அமேதி தொகுதியில் தனிப்பெரும் சக்தியாக திகழ்ந்துள்ளார்.

ஆனால் இம்முறை சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ளதால், அந்தத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்ற தகவலும் பரவுகிறது. ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும், அத்தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பாஜகவும் சமாஜ்வாதி கட்சிகளுமே வென்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு கோட்டையாக கருதப்பட்ட அமேதியில் ராகுல்காந்தியை வீழ்த்தி ஸ்மிருதி இராணி வெற்றி பெற்றிருந்தார். அமேதி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், அவர் போட்டியிட விரும்பவில்லை என தெரிவித்து வருகிறார்.

இத்தகைய சூழலில் காங்கிரஸ் துணைத் தலைவர் உபேந்திர சிங், காங்கிரஸ் கட்சியில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மாநில காங்கிரஸ் தலைமையில்லாமல் மூழ்கும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி கட்சியின் பிற தலைவர்கள் தன்னுடன் பொறுப்பில் இருப்பதாகவும் விரைவில் பாஜகவி இணைவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

பாஜக

எதிர்க்கட்சிகள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் பாஜக மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சிட்டிங் எம்.பிக்கள் பெருமளவில் மாற்றப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் வேட்பாளர் தேர்வில் நான்கு மாற்றங்களை மட்டுமே செய்துள்ளது.

பிரதமர் மோடி வாரணாசியில் இருந்தும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவில் இருந்தும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அமேதியில் இருந்தும், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் மகேஷ் ஷர்மா கவுதம் புத் நகரில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.

குஜராத்தை போன்றதல்ல உத்தரப்பிரதேசம் என்பதையும் பாஜக அறிந்தே உள்ளது. மாநிலத்தில் ஆளும் அரசுக்கு எதிராக அதிருப்திக்கள் எழுந்துள்ளன. காவல்துறையினருக்கான ஆட்சேர்ப்புத் தேர்வில் நடந்த குளறுபடிகள், வேலையில்லாத் திண்டாட்டம், டெல்லியில் பெரிய அளவில் நடக்கும் விவசாயிகளின் போராட்டம் போன்ற சூழல்கள் அதிருதி வாக்குகளை அதிகமாக்கியுள்ளது.

ஆனாலும் ஓபிசி மக்களது வாக்குகள் பாஜக கூட்டணிக்கு செல்லும் வகையில் கூட்டணியையும் அமைத்துள்ளது. ஓபிசி மக்களது வாக்குகளை மேம்படுத்தும் வகையில் ஓபிசி மக்களது செல்வாக்கு கொண்ட நிஷாத் கட்சி, ஓம் பிரகாஷ் ராஜ்பரின் சுஹல்தேவ் பாரதிய சமாஜ், குர்மி சமூக மக்களது ஆதரவு கொண்ட அப்னா தளம் போன்றவையும் பாஜக கூட்டணியில் அமைந்துள்ளன. ஜாட் சமூக மக்களது பிரதிநிதியாக கருதப்படும் ராஷ்ட்ரிய லோக் தளமும் கூட்டணியில் இணைந்தது பலமாக கருதப்படுகிறது.

இதுவரை சமாஜ்வாதி கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்த ஜெயந்த் சௌத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளம், சமீபத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. ஆனால் ஜாட் சமூக மக்கள் பெரும்பாலும் விவசாயிகள். டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் ஜாட்சமூக மக்களது வாக்குகளைப் பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரு பொதுத்தேர்தல்களிலும் ஒரு எம்.பி.யைக் கூட பெறாத அக்கட்சி பாஜகவில் இணைந்ததன் மூலமாக எம்.பிக்கனவு சாத்தியப்படுமா என எதிர்பார்க்கிறது.

பகுஜன் சமாஜ்

தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள மாயாவதியின் முடிவு பாஜகவிற்கு உதவும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

உத்தரபிரதேசத்தில் மக்கள் தொகையில் இஸ்லாமிய மக்கள் 19% பேர் உள்ளனர். 20 முதல் 24 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக இவர்கள் உள்ளனர். 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி, இஸ்லாமிய மக்களது வாக்குகள் அதிகளவில் உள்ள மேற்கு உத்தரப்பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அவர்கள் வென்றது 10 தொகுதிகளே எனினும் பெரும்பான்மையான தொகுதிகள் மேற்கு உ.பியில் உள்ள ரோஹில்கண்ட் பகுதியில் உள்ள தொகுதிகளே கைப்பற்றியது. இதன் காரணமாக செல்வாக்கு மிகுந்த இஸ்லாமிய வேட்பாளர்களை பகுஜன் சமாஜ் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸின் INDIA கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில்கூட பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி.ரித்தேஷ் பாண்டே பாஜகவில் இணைந்தார். இது அக்கட்சியில் உள்ள மற்ற எம்.பி.க்களின் மனப்போக்கை பிரதிபலிக்கிறது என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு காரணமாக மாயாவதின் அரசியல் செயல்பாடற்ற தன்மையை தெரிவிக்கின்றனர். மாநிலத்தில் அக்கட்சியின் சில எம்.பி.க்களும் அணிமாற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எம்.பி.சங்கீதா ஆசாத், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட டேனிஷ் அலி போன்றோரும் அணி மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜன்பூர் எம்.பி. ஷ்யாம் சிங் யாதவ் ஆக்ராவில் நடந்த பாரத் ஜூடோ நியாய யாத்ராவில் கலந்து கொண்டதன் மூலம் அவரும் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்றே கூறப்படுகிறது.

ஆனால் இதைப்பற்றி பேசி இருந்த மாயாவதி, எம்.பி.க்கள் வேறு கட்சிகளுக்கு செல்வது, அவர்களுக்கு உரிய பகுதிகளில் அவர்கள் சரியாக வேலை செய்யாததால் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிந்துதான். இதை கட்சியின் பலவீனமாக ஊடகங்கள் காட்டுவது பொருத்தமற்றது என தெரிவித்திருந்தார்.

உத்தரப்பிரதேசம் தற்போது பாஜகவின் கோட்டை என்பதில் சந்தேகமில்லை. மாநிலத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வேட்பாளர்களின் ஒருதலைப் பட்ச தேர்தலாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், எஞ்சியுள்ள 20 - 30 தொகுதிகளில் நடக்கும் போட்டி என்பது ,மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி இந்தியா கூட்டணியில் அலை வீசினால் பெரிய மாற்றம் நிகழலாம். என்ன நடக்கும் என்பது தேர்தலுக்கு பிறகே தெரியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com