வெறும் 400 மீ. தூரம்தான்.. அமெரிக்க பெண்ணிடம் ரூ.18,000 வசூலித்த மும்பை கார் டிரைவர்!
மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இருந்து ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு 400 மீட்டர் குறுகிய பயணத்திற்கு ரூ.18,000 அதிகமாக வசூலித்ததாக அமெரிக்க பெண்மணி ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மும்பை போலீசார் கார் ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.
ஜனவரி 12ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து வந்த பெண்மணி மும்பையில் களமிறங்கியுள்ளார். அப்போது, விமான நிலையத்திற்கு அருகில் ஒரு காரை வாடகைக்கு எடுத்து, சில நூறு மீட்டர் தொலைவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். ஆனால், அதற்கு முன்பு அந்தப் பெண்மணியை கார் டிரைவர் நேரடியாக ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அந்தேரி (கிழக்கு) முழுவதும் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் ஓட்டிச் சென்று, பின்னர் அதே ஹோட்டலில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். மேலும், அவரிடம் பயணக் கட்டமாக ரூ.18,000, (200 அமெரிக்க டாலர்கள்) வசூலித்ததாகக் கூறப்படுகிறது. தவிர, ஓட்டுநருடன் மற்றொரு நபர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர், அந்தப் பெண்மணி அமெரிக்கா சென்ற நிலையில், கடந்த ஜனவரி 26ஆம் தேதி தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில், ’ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளி முதலில் தன்னைத் தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்று, பணம் கேட்டு, பின்னர் விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ள ஹோட்டலில் இறக்கிவிட்டனர்’ எனப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலான நிலையில், அவருக்கு ஆதரவாகக் குரல்களும் எழுந்தன. இதையடுத்து, ஜனவரி 27 அன்று மும்பை போலீசார் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர். அந்தப் பதிவில் பகிரப்பட்ட டாக்ஸியின் பதிவு எண்ணைப் பயன்படுத்தி, கார் ஓட்டுநர் தேஷ்ராஜ் யாதவையும் போலீசார் கைது செய்தனர். அவருடைய காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தவிர, அவருடைய லைஜென்ஸையும் ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அவருடன் பயணித்த மற்றொரு நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

