கோயில் மீது கட்டப்பட்ட இஸ்லாமிய கல்லறை..? இந்து அமைப்பினர் தாக்குதல்.. பதற்றத்தில் உ.பி.!
கல்லறைக்கு உரிமை கொண்டாடிய இந்து அமைப்பினர்
வட இந்தியாவில், இந்துக் கோயில்கள் உள்ள நிலங்களில் மசூதிக்கள் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லி, அதுதொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேநேரத்தில், அதுதொடர்பான இடங்களில் இருக்கும் மசூதிகள், கல்லறைகள் உள்ளிட்டவையும் சேதப்படுத்தப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூரில் உள்ள கல்லறை ஒன்றை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் சேதப்படுத்திய விவகாரம் பேசுபொருளாகி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூரின் சதர் தெஹ்ஸில் தாலுகாவின் ரெடியா பகுதியின் அபு நகரில் நவாப் அப்துஸ் சமத்தின் பெயரில் இஸ்லாமியர்களின் பழைய கல்லறை ஒன்று அமைந்துள்ளது. இது, அரசாங்க பதிவுகளில் மக்பரா மங்கி (தேசிய சொத்து) என்று அதிகாரப்பூர்வமாக காஸ்ரா எண் 753இன்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லறை, தாக்குர்ஜி மற்றும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் என்றும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலானது என்றும் கணித மந்திர் சன்ரக்ஷன் சங்கர்ஷ் சமிதி மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) உள்ளிட்ட பிற இந்துக் குழுவினர் எதிர்ப்பு தெரித்துள்ளனர். ”அந்தக் கல்லறை, காலப்போக்கில் மாற்றப்பட்ட ஒரு கோயில்” என்று இயக்கத்தின் முன்னணியில் இருந்த பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாவட்டத் தலைவர் முகலால் பால் கூறியதைத் தொடர்ந்து சர்ச்சை வெடித்தது. ”இது தாக்குர் ஜி மற்றும் சிவபெருமானின் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில் என்றும், கட்டமைப்பிற்குள் ஒரு தாமரை மலர் மற்றும் திரிசூலம் இருப்பது ஆதாரமாக உள்ளது” என்றும் அவர் கூறினார்.
எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாம் அமைப்பு
அதேபோல் விஸ்வ இந்து பரிஷத்தின் (VHP) மாநில துணைத் தலைவர் வீரேந்திர பாண்டே, ”இந்த இடம் பகவான் போலேநாத் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் கோயில். இந்த அமைப்பு ஒரு கல்லறை அல்ல. மத அடையாளங்கள், பரிக்ரம மார்க் மற்றும் ஒரு கோயில் கிணறு உள்ளன. ஆகஸ்ட் 16 அன்று ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்களுக்காக அதை சுத்தம் செய்ய விரும்புகிறோம். பத்து நாட்களுக்கு முன்பு நிர்வாகத்திற்கு நாங்கள் தகவல் தெரிவித்திருந்தோம், ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த இடம், இந்துக்களின் நம்பிக்கையின் மைய இடம். அதை மீட்டெடுப்போம்” என சபதமிட்டுள்ளார். இவர்களைத் தவிர, இன்னும் சில இந்து அமைப்புகள் அந்தக் கல்லறைக்கு உரிமை கொண்டாடி இருக்கின்றன.
ஆனால் இதுதொடர்பாகப் பதிலளித்துள்ள தேசிய உலமா சபையின் தேசியச் செயலாளர் மோ நசீம், ”இது, வரலாற்றையும் சமூக நல்லிணக்கத்தையும் சிதைக்கும் முயற்சி. இது, பல நூற்றாண்டுகள் பழைமையான கல்லறை. இந்த இடம் குறித்து அரசாங்க ஆவணங்களில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது நாம் ஒவ்வொரு மசூதி மற்றும் கல்லறையின் கீழும் கோயில்களைத் தேடப் போகிறோமா? இந்த விவகாரத்தை, மாவட்ட நிர்வாகம் நிறுத்தத் தவறினால், உலமா சபை போராட்டங்களைத் தொடங்கும். நிர்வாகம் ஒருதலைப்பட்சமான கதைகளை மட்டுமே மகிழ்விக்கின்றன. மத ஒப்பந்தக்காரர்கள் நம்பிக்கை என்ற போர்வையில் பதற்றங்களைத் தூண்ட அனுமதிக்கின்றன” என அவர் எச்சரித்துள்ளார்.
கல்லறை சேதம்; போலீஸ் குவிப்பு!
இந்தக் கூற்றைத் தொடர்ந்து, கோயில் கட்டடத்தின் மீது கல்லறை கட்டப்பட்டிருப்பதாகக் கூறி ஓர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கல்லறை வளாகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பகுதியைச் சேதப்படுத்தினர். மேலும் அந்தக் குழு, அங்கு ஒரு பூஜை செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, நிலைமையைக் கவனத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் அந்த இடத்தைச் சுற்றி தடுப்புகளை அமைத்து கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை விதித்துள்ளது.
மேலும் காவல் துறையினர் சுற்றி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மோதல் அதிகரிப்பதைத் தடுக்க, அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். சர்ச்சைக்குரிய பகுதிக்குள் யாரும் நுழைய முடியாதபடி மாவட்ட அதிகாரியின் உத்தரவின் பேரில் தடுப்புகள் அமைக்கப்படுவதாக நகர் பாலிகா பரிஷத் ஜூனியர் இன்ஜினியர் அவினாஷ் பாண்டே உறுதிப்படுத்தியுள்ளார்.