மதுரா ஷாஹி மசூதி.. சர்ச்சைக்குரிய கட்டமைப்பாக அறிவிக்கக் கோரிய மனு நிராகரிப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணர் கோயில் உள்ளது. அதையொட்டி ஷாஹி இத்கா மசூதி அமைந்துள்ளது. முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில், 1670ஆம் ஆண்டு ஷாஹி இத்கா மசூதியைக் கட்டுவதற்காக ஓர்ச்சாவைச் சேர்ந்த ராஜா வீர் சிங் பண்டேலாவால் 1618ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கோயில் இடிக்கப்பட்டது. ஆகையால், அதை அகற்ற வேண்டும் எனக் கூறி பல மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மறுபுறம் ஷாஹி இத்கா மசூதி குழு மற்றும் உ.பி. சன்னி மத்திய வக்ஃப் வாரியம், ”மசூதி சர்ச்சைக்குரிய நிலத்திற்குள் வரவில்லை” என தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஷாஹி மசூதியை சர்ச்சைக்குரிய கட்டமைப்பாக அறிவிக்கக் கோரி இந்து தரப்பு தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வழக்கு ஆவணங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் முழுவதும் ஷாஹி இத்கா மசூதி என்ற வார்த்தையை சர்ச்சைக்குரிய அமைப்பு என்று மாற்றுமாறு சம்பந்தப்பட்ட ஸ்டெனோகிராஃபரை உத்தரவிடுமாறு வழக்கறிஞர் மகேந்திர பிரதாப் சிங் தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், மசூதி பற்றிய அதிகாரப்பூர்வ குறிப்புகளில் அத்தகைய மாற்றத்தை எதிர்க்கும் முஸ்லிம் தரப்பு இந்தக் கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வ ஆட்சேபனையை சமர்ப்பித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ராவின் தனி அமர்வு, மனுவை நிராகரித்து, முஸ்லிம் தரப்பு எழுப்பிய ஆட்சேபனையை உறுதி செய்தது.
மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி மற்றும் ஷாஹி இத்கா மசூதியைச் சுற்றியுள்ள சர்ச்சைக்குரிய நிலம் மற்றும் மத உரிமைகோரல்கள் தொடர்பாக இந்து தரப்பைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த 18 மனுக்களில் இந்த வழக்கும் ஒன்றாகும்.