ஹைதராபாத் | பல்கலை நிலத்திற்கு அருகில் புல்டோசர்கள் வருகை.. வெடித்த போராட்டம்!
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் காஞ்சா கச்சிபௌலியில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை மறுசீரமைப்பு செய்யும் நோக்கில், ஒரு ஐடி பூங்காவை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், ’மாநிலத்தில் முதலீட்டை ஊக்குவிப்பதே தனது குறிக்கோள் என்றும், அந்த நிலத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்றும் அரசாங்கம் பதிலளித்தது. இந்த நிலையில், நேற்று மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக புல்டோசர்கள் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்கள் அப்பகுதிக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து காவலர்கள் குவிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்படனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கண்டனம் தெரிவித்துள்ளது. ”இது துரோகத்தின் வெளிப்பாடு. ராகுல் காந்தி ஒரு கையில் அரசியலமைப்பைப் பிடித்துக்கொண்டு பிரசங்கம் செய்கிறார். அதேநேரத்தில் அவரது அரசாங்கம் அதற்கு நேர்மாறாகச் செயல்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக காவல் துறையினர், “அரசு அதிகாரிகளை தங்கள் வேலையைச் செய்யவிடாமல் தடுத்ததற்காக 53 மாணவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். காவல் துறையினரை தாக்கிய மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து மாணவர்கள், “காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர் சங்கம் அந்தப் பகுதியில் அமைதியான பேரணியை மட்டுமே நடத்தியது. மாணவர்கள் போராட்டம் நடத்துவதற்கு ஜனநாயக உரிமை உண்டு. ஆனால், காவல் துறையினர் மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இன்னும் சிலர் விடுவிக்கப்படவில்லை. அவர்களை விடுவிக்காவிட்டால் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, தெலுங்கானா முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி ”இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் தூண்டிவிடப்படுகின்றனர். நிலத்தின் திட்டமிடப்பட்ட மேம்பாடு தொடர்பாக நீதிமன்றங்களில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகிறது” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.