மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை!
மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சரும், பாஜக தலைவருமான ரக்ஷா காட்சேவின் மகளுக்கு இளைஞர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், ஜல்கான் மாவட்டத்தில் மகா சிவராத்திரியை ஒட்டி யாத்திரை நடைப்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த யாத்திரையில் ஏராளமானோர் கலந்து கொள்வர். அந்த வகையில் இந்தாண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாத்திரையில் அமைச்சர் ரக்ஷா காட்சேவின் மகள் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், யாத்திரையின்போது சிலர் கும்பலாக சேர்ந்து மத்திய இணையமைச்சரின் மகள் உள்பட மேலும் சிலரை கிண்டல் செய்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அமைச்சர் மகளின் பாதுகாவலர் அவர்களை தடுத்துள்ளார். ஆனால் அவருடன் மோதலில் ஈடுபட்டு மீண்டும் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
புகாரளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த ரக்ஷா காட்சே, ’ ஒரு மத்திய அமைச்சராகவோ, எம்பியாகவோ இங்கு வரவில்லை. ஒரு தாயாக நீதிகேட்டு வந்துள்ளேன். எனது மகளுக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை என்ன? சட்டத்தை அமல்படுத்த மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க நான் வலியுறுத்துவேன். மகாராஷ்டிரா முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. சட்டத்தின் மீது பயம் இல்லை. பல பெண்கள் முன்வர தயங்குகிறார்கள், ஆனால் நாம் அமைதியாக இருக்கக்கூடாது’ என கேள்வி எழுப்பினார்.
ரக்ஷா காட்சே இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் சப்கல், மாநிலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து விட்டதாகவும், முதல்வர் தேவந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டுமெனவும் கூறியுள்ளார். அதேவேளையில் தேவந்திர பட்னாவிஸ், குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்களே இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முக்தைநகர் காவல் அதிகாரி கூறுகையில், "பிப்ரவரி 28 அன்று, யாத்திரையின் போது நடைப்பெற்ற இந்த சம்பவத்தில், அனிகேத் பூய், பியூஷ் மோர், சோஹம் கோடி, அனுஜ் பாட்டீல், சேதன் பூய், சச்சின் பால்வே மற்றும் கிரண் மதி ஆகியோர் பெண்களை பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். FIR பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அனிகேத் பூய் மீது ஏற்கனவே 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்கள் மீது முன்பு வேறு எந்த வழக்குகளும் இல்லை. ” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குற்றவாளிகள்மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த விவகாரத்தில் சோஹம் மாலி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.