\
Union Govt's big allegations on Telegram ban case
டெலிகிராம்reuters

டெலிகிராம் மீது தடை ஏன்? முக்கியக் குற்றச்சாட்டுகளை வைத்த மத்திய அரசு!

டெலிகிராமில் பகிரப்பட்ட தகவலை சரிசெய்யும் வசதியை (எடிட்டிங் வசதி) 30-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கவும் டெலிகிராம் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Published on

நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்கும் ஒரு பகுதியாக, நீட் மறுதேர்வு முடியும்வரை டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அதுதொடர்பாக மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், டெலிகிராம் மீது மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

வினாத்தாள் கசிவைத் தடுக்கும் ஒரு பகுதியாக, நீட் மறுதேர்வு முடியும்வரை டெலிகிராம் செயலியை தடை செய்ய வேண்டும் என தேசிய தேர்வு முகைமை மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியிருந்தது. இந்த நிலையில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000- பிரிவு 69A-இன்கீழ் டெலிகிராம் செயலியை ஜூன் 22-ஆம் தேதி வரை தடைசெய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டெலிகிராம் செயலியின் மூலமே பெரும்பாலும் வினாத்தாள் கசிவதாக எழுந்த புகாரையெடுத்தே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், ஏற்கெனவே டெலிகிராமில் பகிரப்பட்ட தகவலை சரிசெய்யும் வசதியை (எடிட்டிங் வசதி) 30-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கவும் டெலிகிராம் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்தத் தடைக்கு எதிராக டெலிகிராம் நிறுவனம், டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் டெலிகிராம் தடை விதிக்கப்பட்டதன் பின்னணியில், ரிலையன்ஸ் நிறுவனம் இருப்பதாக டெலிகிராம் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கிடையே, இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், டெலிகிராம் மீது மத்திய அரசு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

telegram
telegramreuters

இந்தச் செயலி புதிய டார்க் வெப் ஆக மாறியுள்ளதாகவும், சட்ட அமலாக்கத் துறையிடமிருந்து தப்பிப்பதற்காகக் குற்றவாளிகள், இணையவழி மோசடியாளர்கள், தீவிரவாதக் குழுக்கள் மற்றும் பிற அச்சுறுத்தல் சக்திகளால் இது அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில், நீட் போன்ற கசிந்த தேர்வுத் தாள்களைப் பரப்புதல், இணையவழி மோசடி, பயங்கரவாதம் தொடர்பான பிரசாரம், குழந்தைகளைப் பாலியல் ரீதியாகச் சுரண்டும் பொருட்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் நிதிக்குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான ஒரு முக்கிய தளமாக டெலிகிராம் உருவெடுத்துள்ளதாக அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், டெலிகிராமின் தனியுரிமை மற்றும் அடையாளம் மறைப்பு அம்சங்கள், அதனை குற்றக் குழுக்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்கியுள்ளன எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Union Govt's big allegations on Telegram ban case
ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்குத் தடை.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை.. காரணம் என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com