2025-26 மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகள் | மாத சம்பளம் வாங்குவோருக்கு கூடுதல் வரிச்சலுகை கிடைக்குமா?
நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டையொட்டி பல்வேறு துறைகள் சார்ந்து என்னென்ன எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்பதை ஒவ்வொரு துறையாக பார்த்து வருகிறோம். தற்போது ரியல் எஸ்டேட் மற்றும் மாத சம்பளம் வாங்குவோருக்கான சலுகைகள் குறித்து பார்க்கவுள்ளோம்...
வர இருக்கின்ற 2025-2026 மத்திய பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறை சில எதிர்பார்ப்புகளை கோரியுள்ளது...
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியடையும் நோக்கில் எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என துறை சார்ந்தவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரியல் எஸ்டேட் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், கடன் சார்ந்த மானியத் திட்டத்தை தங்கள் துறைக்கு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். ரியல் எஸ்டேட் துறையில் கட்டுமான பணிகள் இல்லாத நாட்களில் நிறுவனங்களுக்கு வரி வசூலிக்கக் கூடாது என வலியுறுத்துகின்றனர்.
வீட்டுக் கடனுக்கு திரும்ப செலுத்தும் வட்டிக்கு வரிவிலக்கை அதிகப்படுத்த வேண்டும் எனவும் ரியல் எஸ்டேட் துறையினர் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், உட்கட்டமைப்பு திட்டங்களை அதிகப்படுத்த வேண்டும், நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களுக்கு சீர்திருத்தங்கள், ஒற்றைச்சாளர முறையில் அனுமதி முறையை அறிமுகப்படுத்துதல் ஆகியவைகளையும் எதிர்வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டுமான நிறுவனங்களிடம் பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவது, முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஊக்கத் தொகைகளை அறிமுகப்படுத்துவதும் அவசியம் என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மாத சம்பளம் வாங்குவோருக்கு மத்திய பட்ஜெட்டில் கூடுதல் வரிச்சலுகை கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது
மாதச் சம்பளம் வாங்குவோருக்கு எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் கூடுதல் வரிச்சலுகை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாத வருவாய் பிரிவில் நடுத்தர பிரிவினரே அதிகம் உள்ள நிலையில் தங்களுக்கு நிதிச்சுமையை குறைக்கும் நோக்கில் வரிச்சலுகை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
குறிப்பாக, வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிவிலக்கிற்கான வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே 80சி பிரிவில் வரிவிலக்கு வரம்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது. 80சி பிரிவின் கீழ், ஒருசிலவற்றை மட்டும் தவிர்த்து மியூச்சுவல் ஃபண்ட், பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், பணியாளர் வருங்கால வைப்பு நிதி, யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டங்கள், சுகன்யா சம்ரிதி என அனைத்து முதலீட்டு திட்டங்களும் வருகின்றன.
அதேபோல, 2 குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம், வீட்டுக் கடனில் அசல் தொகையை திரும்பிச் செலுத்துதல், ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு செலுத்தப்படும் பிரீமியங்கள் உள்ளிட்டவையும் 80சி பிரிவின் கீழ் வருகின்றன. எனவே, எதிர்வரும் பட்ஜெட்டில் 80சி பிரிவில் வரிச்சலுகையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.