மத்திய பட்ஜெட் 2025-2026
மத்திய பட்ஜெட் 2025-2026pt

2025-26 மத்திய பட்ஜெட்|ஸ்மார்ட்போன்களுக்கான இறக்குமதி வரி To நகைகளுக்கான ஜிஎஸ்டி; எழும் கோரிக்கைகள்!

மத்திய பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்களுக்கான இறக்குமதி வரி, நகைகளுக்கான ஜிஎஸ்டி குறைப்பு முதலிய கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
Published on

ஸ்மார்ட்போன்களுக்கு இறக்குமதி வரியை குறைத்தால் ஆபத்து!

எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்களுக்கு இறக்குமதி வரியை குறைத்தால் எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் துறை பாதிப்படையக்கூடும் என ஆய்வு நிறுவனமான GTRI தெரிவித்துள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றிப்படிகளில் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி துறையும் உள்ளது. 2023-24ஆம் நிதியாண்டில் 4 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

Smart Phones
Smart Phones

இந்நிலையில், சில நிறுவனங்கள் இறக்குமதி வரியை குறைக்க கோரிக்கை விடுப்பதை சுட்டிக்காட்டியுள்ள GTRI, அப்படி செய்தால், உள்நாட்டில் முதலீடுகள் குறைந்து இறக்குமதி அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இதன் விளைவு நிறைய பேர் வேலைவாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்படும் என்பதால் இறக்குமதி வரியை குறைப்பது சரியல்ல என தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டியை 1%ஆக குறைக்க நவரத்தினங்கள் மற்றும் நகைகள் துறை கோரிக்கை!

எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் ஜிஎஸ்டியை ஒரு சதவிகிதமாக குறைக்க வேண்டும் என நவரத்தினங்கள் மற்றும் நகைகள் உற்பத்தித் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வரும் நிலையில், ஜிஎஸ்டி அதிகமாக இருப்பதால் தங்கள் துறை வெகுவாக பாதிப்பதாக அனைத்து இந்திய நவரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்நாட்டு கவுன்சிலின் தலைவர் ராஜேஷ் ரோக்டே தெரிவித்துள்ளார்.

எனவே, வரவிருக்கும் பட்ஜெட்டில் ஜிஎஸ்டியை 3 சதவிகிதத்தில் இருந்து ஒரு சதவிகிதமாக குறைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜிஎஸ்டியை குறப்பதனால், கிராமப்புற மக்கள் நகைகளை வாங்குவது அதிகரிக்கும் என்றும் இது பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என அனைத்து இந்திய நவரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்நாட்டு கவுன்சில் கூறியுள்ளது. அதேபோல, ஆய்வகங்களில் உருவாக்கப்படும் வைரங்களுக்கு ஜிஎஸ்டியில் சலுகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் தலைநகர் டெல்லிக்கு ஒன்றும் கிடையாது!

2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் டெல்லிக்கு எந்த அறிவிப்பும் இருக்கக்கூடாது என அமைச்சரவை செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதியும் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் தேர்தல் நடத்தை விதிகள் டெல்லியில் அமலில் உள்ளதால், இந்த முறை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் எவ்வித அறிவிப்பும் இருக்க வாய்ப்பில்லை.

சிறு, குறு தொழில்களுக்கான வரியை 15% ஆக குறைக்க வேண்டும்!

வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சிறு, குறு தொழில்களுக்கான வரியை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்க தமிழக சிறு, குறு தொழில்கள் சங்கம் டான்ஸ்டியா (TANSTIA) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

மேலும், பொதுத் துறை நிறுவனங்களின் கட்டாய கொள்முதல் அளவை 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக உயர்த்த வேண்டும் எனவும் அனைத்து வங்கிகளிலும் சிறு, குறு நிறுவனங்களுக்கு ஒரே அளவாக 8 சதவீத வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்றும் டான்ஸ்டியா கோரிக்கை வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com