விமானச் சேவைக் குளறுபடி.. "இண்டிகோ நிறுவனம் மீது கடும் நடவடிக்கை" - மத்திய அமைச்சர் உறுதி!
இண்டிகோ விமானங்கள் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருவதால், பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் விசாரணைக்குப் பிறகு இண்டிகோ மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உறுதியளித்துள்ளார்.
இண்டிகோ விமான சேவை 7-வது நாளாக தொடர்ந்து நேற்றும் பாதிக்கப்பட்டு 500 மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இவ்வாறு தொடர்ச்சியான விமான சேவை பாதிப்பின் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து நேற்று (திங்கட்கிழமை) மாநிலங்களைவையில் நடந்த விவாதத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிடம் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இண்டிகோ விமான சேவை பாதிப்பு குறித்தான கேள்விகளுக்கு விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் ராயுடு பதிலளித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், “இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு, தானியங்கி தகவல் பரிமாற்ற அமைப்பில் (AMSS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமில்லை. பணியாளர் குழு மேலாண்மையில் இண்டிகோ மேற்கொண்ட தவறே முழுக் காரணம். ஒட்டுமொத்தமாக விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் (FDTL) 22 உள்ளன. இதில், 15 விதிகள் நடப்பாண்டு ஜூலை 1ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட்டன. மீதமுள்ள 7 விதிகள் நவம்பர் 1ஆம் தேதி அமலுக்கு வந்தன. இந்த விதிகளை அமல்படுத்துவதற்கு முன்னர் மத்திய அரசு இண்டிகோ உட்பட அனைத்து விமான நிறுவனங்களுடனும் ஆலோசித்தது.
பயணிகள் பாதுகாப்பில் எவ்வித சமரசமுமின்றி இந்த விதிகளை அமல்படுத்த வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, விமான நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டன. டிசம்பர் 1ஆம் தேதி இண்டிகோ நிறுவனத்துடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது FDTL குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் இந்தப் பிரச்சினையை எழுப்பவில்லை.
விமானங்கள் மற்றும் விமானக் குழுவினரின் செயல்பாடுகளைக் கவனிக்க வேண்டியது நிறுவனத்தின் பொறுப்பு. அதை இண்டிகோ முறையாக மேற்கொள்ளவில்லை. எனவே, இந்த விவகாரத்தை அரசு மிக எளிதாக எடுத்துக் கொள்ளாது. இந்த விவகாரத்தில், நாங்கள் கடும் நடவடிக்கை எடுத்து மற்ற விமான நிறுவனங்களுக்கு முன்மாதிரியை ஏற்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.
இண்டிகோ தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் விளக்கம்..
தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்கக்கோரி விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அனுப்பிய நோட்டீஸுக்கு இண்டிகோ தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் நேற்று பதிலளித்தார். அதில், விமானங்கள் ரத்தால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்புக் கோருவதாகத் தெரிவிக்கப்பட்டது. சிறு தொழில்நுட்பக் கோளாறுகளில் தொடங்கி, பருவநிலை, FDTL என பல்வேறு காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், நடந்த தவறுகளுக்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தை மட்டுமே சுட்டிக்காட்டுவது மிகக் கடினமானது என்றும் அவர் கூறினார்.
DGCA அனுப்பும் நோட்டீஸ்களுக்கு பதிலளிக்க 15 நாள் கால அவகாசம் உள்ளது என்றும், இந்தக் குளறுபடிகளுக்கான விரிவான காரணங்களைக் கண்டறிய கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் அவர் பதிலில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, இண்டிகோ அளித்த பதிலை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என DGCA தெரிவித்தது.
உச்ச நீதிமன்றம் மறுப்பு
இண்டிகோ விவகாரத்தில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளக் கூறி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, இது மிகத் தீவிரப் பிரச்சினைதான் என்றாலும், விமான நிலையங்களில் லட்சக்கணக்கான பயணிகள் சிக்கியுள்ளனர். இதைக் கவனத்தில்கொண்டு உரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என அறிகிறோம். எனவே, இதை உடனடி வழக்காக விசாரிக்க இயலாது என்று குறிப்பிட்டு இந்த வழக்கை நேற்று ஒத்திவைத்திருக்கிறது.

