இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை.. யுஜிசி புதிய உத்தரவு.!
யுஜிசி உத்தரவின்படி, இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் மூன்றாவது மொழி கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்துடன் மேலும் ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும். இதனால் கல்வித் துறையில் சிக்கல்கள் ஏற்படலாம் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனங்களுக்கு யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாணாக்கரும் தனது தாய் மொழி அல்லது தாங்கள் வசிக்கும் மாநிலத்தின் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றைத் தவிர மூன்றாவதாக ஏதேனும் ஒரு இந்திய மொழியை கற்கவேண்டும் என்பதே யுஜிசியின் அந்த புதிய உத்தரவு.
அதன்படி, குறைந்தபட்சம் மூன்று மொழிகளைக் கற்பிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இருக்க வேண்டும். இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணாவர்களும், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களும் மூன்றாம் மொழியை கற்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று யுஜிசி கூறியுள்ளது. இந்தப் புதிய மொழிப் பாடத்திட்டங்கள், "அடிப்படை, இடைநிலை மற்றும் உயர்நிலை" என மூன்று நிலைகளில் நெகிழ்வுத் தன்மையுடன் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூன்றாவது மொழி கற்பது மாணாக்கரின் விருப்பத் தேர்வாக இருக்க வேண்டுமே தவிர கட்டாயப் பாடமாக இருக்கக் கூடாது என்று சில பேராசிரியர்கள் கூறியுள்ளனர். இந்திய மொழிகளைக் கற்பதைவிட வெளிநாட்டு மொழிகளைக் கற்பதே வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் என்று சிலர் கூறியுள்ளனர். தொடர்ந்து, பல இந்திய மொழிகளைக் கற்பிக்க, போதுமான பேராசிரியர்களைப் பெறுவது சவாலாக இருக்கும் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.
தேசிய கல்விக் கொள்கையின்படி பள்ளிகளில் மூன்று மொழிகளைக் கட்டாயமாக்கும் திட்டத்துக்கு தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு நிலவிவரும் சூழலில், உயர்கல்வி நிறுவனங்களிலும் மும்மொழி கற்பிக்கும் திட்டத்தால் கல்வித் துறையில் சிக்கல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உயர்கல்வி நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

