”மக்களின் மனது புண்படும்படி பேசுவதை தவிர்க்கணும்” - உதயநிதி விவகாரத்தில் களத்தில் இறங்கிய மம்தா!

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசனை கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின், மம்தா பானர்ஜி
உதயநிதி ஸ்டாலின், மம்தா பானர்ஜிட்விட்டர்

உதயநிதிக்கு எதிராக வலுக்கும் புகார்கள்

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன குறித்த பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பலை உருவாகியுள்ளது. அதாவது, ‘அமைச்சர் உதயநிதி இந்து மக்களை படுகொலை செய்ய வேண்டும்’ என்று பேசியிருப்பதாக இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் சார்பில் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. ’சனாதனம் என்பதற்கு இந்து மதம் என்ற ஓர் அர்த்தமும் உள்ளது. அப்படியென்றால், சனாதனத்தை ஒழிப்பது என்பது இந்து மதத்தினரை ஒழிப்பது என்றுதானே பொருள்’ என்கிறரீதியில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

’உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி’

மேலும், இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவைச் சேர்ந்த பலரும் அவருக்கு எதிராகக் கண்டனங்களைப் பதிவு செய்து வருவதுடன், அவர்மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. ”சனாதனம் குறித்த கருத்தை உதயநிதி வாபஸ் பெறாவிட்டால், மகாராஷ்டிராவிற்குள் நுழைய முடியாது” என அம்மாநில அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா எச்சரித்துள்ளார். அயோத்தியைச் சேர்ந்த துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யாவோ, ’உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி’ என அறிவித்திருப்பதுடன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை வாளால் கிழித்து தீயிட்டு கொளுத்தும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். எனினும் சனாதனம் குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இதுதொடர்பான வழக்குகளைச் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதுபோல் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன கருத்துக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின், மம்தா பானர்ஜி
”உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி” - துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா அறிவிப்பு!

உதயநிதியின் சனாதனம் தொடர்பான கருத்துக்கு ஆதரவு!

ஏற்கெனவே காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், சனாதன ஒழிப்பு மாநாட்டை நடத்திய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்கூட இதுகுறித்து விளக்கமளித்துள்ளது. அதில், ’அமைச்சர் உதயநிதி சனாதன கருத்தியலை ஒழிக்க வேண்டும் என பேசிய உரையை திரித்து அரசியல் லாபத்திற்காக அவதூறு பரப்பி வருகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ’சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதால் என்ன குற்றம்? சனாதனவாதிகள் உறுமுவது ஏன், திசை திருப்புவது ஏன்’ எனவும் கேள்வி எழுப்பிய அவர், ’உதயநிதி பேசியதை திரித்துப் பரப்புவது வன்மையான கண்டனத்திற்குரியது’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதானம். குறித்து தெரிவித்த கருத்து, பகுத்தறிவாளர்கள் தொடர்ந்து முன்வைத்து வருவதுதான். கடந்த காலங்களில் வாய்மூடி கடந்துசென்ற பாஜகவும், இந்துத்துவா கும்பலும் தற்போது வானத்துக்கும், பூமிக்கும் எகிறி குதித்து வருகின்றன. இது பகுத்தறிவுக்கு சிந்தனைக்கும் அறிவியல் கண்ணோட்டத்துக்கும் எதிரானது என்பதுடன் சமூக வளர்ச்சி தடுத்து நிறுத்த முயற்சிக்கும் அறிவீனதுமாகும். இது, சமய நம்பிக்கையை இழிவுசெய்யும் நோக்கம் கொண்டதல்ல என்பதை சாதாரண அறிவுள்ளோரும் அறிவர்.

இரா. முத்தரசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இரா. முத்தரசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி WebTeam

ஆனால், பாஜகவும், சங் பரிவார் கும்பலும் உதயநிதி ஸ்டாலின் இந்து சமயத்தை இழிவுபடுத்தியதாக பச்சை புளுகு மூட்டை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

”விஷமப் பிரச்சாரத்தை இந்திய மக்கள் நிராகரிப்பார்கள்” - கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “மனு தர்ம ஆட்சியை மீண்டும் கொண்டுவரத் துடிக்கும் சங்பரிவாரத்தினர் மக்களை பிளவுபடுத்தி தங்களது வாக்கு வங்கி அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர் என்பதற்கு ஏராளமான சாட்சியங்கள் உள்ளன. பாஜகவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஆத்திரத்தில் சங்பரிவாரத்தினர் மேற்கொள்ளும் விஷமப் பிரச்சாரத்தை இந்திய மக்கள் நிராகரிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

பாலகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
பாலகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிWebTeam

உதயநிதிக்கு மம்தா பானர்ஜி அறிவுரை!

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “இந்தியாவில் உள்ள எல்லா மதங்களுக்கும் ஒவ்வொரு உணர்வு இருக்கிறது. ஏராளமான மதங்களுக்கும், ஜாதிகளுக்கும் இந்தியாவில் இடம் இருக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஜனநாயக நாடு. அதனால் அனைத்து மதத்தினரையும் நாம் மதிக்க வேண்டும். நான் சனாதன தர்மத்திற்கு மதிப்பு கொடுக்கிறேன். சனாதனத்தில் கடவுளுக்கு சேவை செய்யும் எத்தனையோ புரோகிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் மதிப்பளிக்கிறேன். பெரும்பான்மை மக்களோ, சிறுபான்மை மக்களோ அவர்களின் உணர்வுகள் புண்படும்படி நாம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

சித்திவிநாயகர் கோயில் மகாராஷ்டிராவிலும், நாடு முழுவதும் மிகவும் பிரபலமானது. இதேபோல், துர்கா பூஜையும் பிரபலமானது. நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்தமானது. நாம் கோவிலுக்கும், மசூதிக்கும், தேவாலயங்களுக்கும் செல்கிறோம். எந்தப் பிரிவினரையும் புண்படுத்தும் விஷயத்தில் ஈடுபடக்கூடாது

உதயநிதி ஒரு ஜூனியர் அரசியல்வாதியாக இருக்கிறார். அவருக்கு இந்த விஷயங்கள் தெரியாமல் இருக்கலாம். அவர் பேசியதை நானும் கேள்விப்பட்டேன். ஆனால் எந்த அர்த்தத்தில் அவர் அப்படி பேசினார் எனத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும், அதுபோன்று அவர் பேசியிருக்கக் கூடாது. அனைத்து மதங்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதே என் கருத்து” எனத் தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், ”நல்லிணக்கமே நமது கலாசாரம். மற்ற மதங்களை நாம் மதிக்க வேண்டும். இதுபோன்ற கருத்துகளுக்கும் இந்தியா கூட்டணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதுபோன்ற அறிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

”மனிதர்களைச் சமமாக நடத்தாத மதமும் நோயே!”

பிரியங்க் கார்கே
பிரியங்க் கார்கேani

கர்நாடக மாநில அமைச்சரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கே, சமத்துவத்தை ஊக்குவிக்காத, மனிதனாக இருப்பதற்கான கண்ணியத்தை உறுதிப்படுத்தாத எந்த மதமும் தன்னைப் பொறுத்தவரை மதம் அல்ல. சம உரிமை கொடுக்காத, சக மனிதர்களைச் சமமாக நடத்தாத எந்த மதமும், நோயைப் போன்றதுதான்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com