JEE தேர்வில் வெற்றிபெற்ற பழங்குடியின மாணவி; 2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய தவெக தலைவர் விஜய்!
வருடந்தோறும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சட்டமன்றத் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் பரிசளித்து, கௌரவித்து வருவது வழக்கம். இந்தவகையில், 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி விருது விழா 4 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல் மூன்று கட்ட நிகழ்வுகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இறுதிக்கட்ட நிகழ்வு இன்று நடைபெறுகிறது.
இந்த விழாவில் சேலம், திருவண்ணாமலை, தூத்துக்குடி, மதுரை, சென்னை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 39 சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டுவருகிறது.
இந்தவகையில், சேலம் மாவட்டம் கருமந்துறையில் இருந்து ஐ.ஐ.டியில் படிக்கத் தேர்வான மாணவி ராஜேஷ்வரி தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவில் கவுரவிக்கப்பட்டார். ராஜேஸ்வரியை பற்றிய குறும்படம் திரையிடப்பட்ட பிறகு, தவெக தலைவர் விஜய், மாணவி ராஜேஸ்வரிக்கு 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையும் பேனாவையும் வழங்கி கவுரவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய விஜய், "வீட்டில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து சாதித்திருக்கிறார். அவருக்கு விஞ்ஞானி ஆகவேண்டும் என்று ஆசை இருக்கிறது. கண்டிப்பாக ஆவீங்க" என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேசிய மாணவி ராஜேஸ்வரி, "நான் மிகவும் கஷ்டப்பட்டு படித்ததை அனைவரும் பார்த்தீர்கள். நான் இந்த மேடைக்கு வருவேன் என எதிர்பார்க்கவே இல்லை. நீங்களும் என்னை போல் ஆக வேண்டுமென்றால் உங்களுக்கு உள்ள ஒரே வழி கல்வி மட்டும்தான். அதை எப்போதும் விட்டு விடாதீர்கள். விஜய் சாரை பார்க்க வேண்டும் என்பது சின்ன வயதில் இருந்து பெரிய கனவு" என்று தெரிவித்துள்ளார்.