விஜய் அறிவித்த மகளிர் வாக்குறுதிகள்.. சந்திர பாபுவின் திட்டமா ? அந்த 5 திட்டங்கள் என்ன?
சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு தவெக சார்பில் மகளிர் தின கொண்டாட்ட விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தவெக தலைவர் விஜய் பெண்களை மையமாகக் கொண்ட 12 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். ஆனால், இதில் அவர் அறிவித்த சில அறிவிப்புகள் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்து, அந்த மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களாக உள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது. ஆந்திராவில் ஆடபிடா நிதி (Aadabidda Nidhi) என்ற பெயரில் 18 முதல் 59 வயது வரை உள்ள தகுதியுள்ள அனைத்துப் பெண்களுக்கும் மாதம் 1,500 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இதே திட்டத்தை சிறிது மாற்றி மதிப்புமிகு மகளிர் திட்டம் என்ற பெயரில் 60 வயது வரை உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 2,500 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார். ஆந்திராவில் தல்லிகி வந்தனம் (Talliki Vandanam) என்ற பெயரில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதே திட்டத்தை காமராஜர் கல்வி உரிமைத் திட்டம் என்ற பெயரில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் தீபம் திட்டம் 2.0 (Deepam 2.0) என்ற பெயரில் ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் கட்டணமில்லாமல் ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை சற்று மாற்றி அன்னபூரணி சூப்பர் 6 என்ற பெயரில் ஒவ்வொரு குடும்பத்திற்கு கட்டணமில்லாமல் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.
மேலும் ஆந்திராவில் ஸ்திரீ சக்தி (Stree Shakti) என்ற பெயரில் A/C, Super Luxury, Ultra Deluxe, Inter-state, Non-stop தவிர்த்த அனைத்து மாநில அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை அடிப்படையாக கொண்டு வெற்றிப் பயணம் திட்டம் என்ற பெயரில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று விஜய் அறிவித்துள்ளார். இதை தவிர, சக்தி டீம்ஸ் (Shakti Teams) என்ற பெயரில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகச் பெண்களை மட்டுமே கொண்ட சாதாரண உடை அணிந்த சிறப்புப் போலீஸ் படைகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த திட்டத்தை பெயரை மட்டும் ராணி வேலுநாச்சியார் படை என்ற மாற்றி அதே திட்டத்தை விஜய் அறிவித்துள்ளார்.

