டிரம்பிடம் இருந்து வந்த ஒரு போன் காலில் சரணடைந்து விட்டார் மோடி’- ராகுல் குற்றச்சாட்டு!
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்கு நான்தான் காரணம் என்று டிரம்ப் ஒருபுறம் கூறி வர, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதற்கு பிரதமர் மோடி விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்தநிலையில், போபாலில் நடந்த காங்கிரஸ் சங்கதன் ஸ்ரீஜன் அபியான் தொடக்க விழாவில் பேசிய ராகுல் காந்தி, இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது டிரம்பிடம் இருந்து வந்த ஒரு போன் காலில் அவரிடம் மோடி சரணடைந்துவிட்டார் என்று பிரதமர் மோடியை விமர்சித்திருக்கிறார்.
மேலும், இது குறித்து தெரிவித்த அவர், ” இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்திவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. எனக்கு இப்போது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸை சேர்ந்தவர்களை பற்றி நன்கு தெரியும். அவர்கள் மீது சிறிதளவு அழுத்தம் கொடுத்தால் போதும். அவர்கள் பயந்துவிடுவார்கள். அமெரிக்க அதிபரிடம் இருந்து ஒரு போன் வந்ததுமே மோடி சரணடைந்துவிட்டார்.
டிரம்ப் போன் செய்து ‛மோடி ஜி என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டு ‛நரேந்திரா சரணடையுங்கள்' என்று கூறினார். உடனே மோடி, ‛எஸ் சார்' என சரணடைந்துவிட்டார். டிரம்பின் சிக்னலுக்கு மோடி ஏற்கிறார்.
நீங்கள் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும். 1971ல் பாகிஸ்தானை உடைத்து வங்கதேசம் உருவாக்கப்பட்டது. இந்த போரின்போது அமெரிக்காவின் ஆயுதங்கள், போர் கப்பல்கள் வந்தன. ஆனால், இந்திரா காந்தி பயப்படவில்லை. நான் செய்ய வேண்டியதை செய்து முடிப்பேன் என்று வெற்றி பெற்றார். இதுதான் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கும் வித்தியாசம். சுதந்திரத்துக்கு பின்னால் அவர்கள் (பாஜக) சரண்டர் கடிதம் எழுதி வருகின்றனர். ஆனால் காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்டவர்கள் ஒருபோதும் சரணடைந்தது இல்லை. அவர்கள் சூப்பர் பவருடன் எதிர்த்து போராடினார்கள்." என்று தெரிவித்தார்.