மேற்கு வங்கம் | 74 சிட்டிங் MLAகளுக்கு NO சீட்.. பாஜகவுக்கு எதிராக மம்தா மெகா ப்ளான்!
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான தனது வேட்பாளர்களை திரிணாமூல் காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 291 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸும், மூன்று தொகுதிகளை அதன் கூட்டணிக் கட்சியான பிஜிபிஎம்க்கு விட்டுக்கொடுத்துள்ளது.
294 தொகுதிகளைக் கொண்டுள்ள மேற்கு வங்கம், இந்தியாவிலேயே அதிக சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட இரண்டாவது மாநிலமாகப் பார்க்கப்படுகிறது. இம்மாநிலத்தில், வரும் தேர்தல் ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸும், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் பாஜகவும் கடுமையான போட்டியில் உள்ளன. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் 144 இடங்களுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டுள்ளது. இதில் சுவேந்து அதிகாரி மற்றும் திலீப் கோஷ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் போட்டியிடுகின்றனர். முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதியான பபானிபூர் மற்றும் நந்திகிராமில் சுவேந்து அதிகாரி நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான தனது வேட்பாளர்களை திரிணாமூல் காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 291 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸும், மூன்று தொகுதிகளை அதன் கூட்டணிக் கட்சியான பிஜிபிஎம்க்கு விட்டுக்கொடுத்துள்ளது.
இதில் அக்கட்சி பாலினம் மற்றும் சமூகப் பிரிவுகள் அனைத்திலும் முக்கியத்துவம் அளித்துள்ளது. அக்கட்சி 53 பெண் வேட்பாளர்களையும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து 95 வேட்பாளர்களையும், சிறுபான்மை சமூகங்களிலிருந்து 48 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளது. ஆட்சிக்கு எதிரான மனநிலையைச் சமாளிப்பதற்காக, அக்கட்சி பதவியில் இருக்கும் 74 சட்டமன்ற உறுப்பினர்களையும் நீக்கியுள்ளது. வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சோஹம் சக்ரவர்த்தி, ஐபிஎஸ் அதிகாரி பிரசுன் பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் மதன் மித்ரா, நடிகை சயந்திகா பானர்ஜி, பாடகி அதிதி முன்ஷி, ஜர்னா சர்தார், பிரபல திரைப்பட இயக்குநர் ராஜ் சக்ரவர்த்தி, நடிகையான லவ்லி மைத்ரா, கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், முன்னாள் மாநிலங்களவை எம்.பி. ரிதாபிரதா பானர்ஜி, மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜியின் மகன் ஷிரண்யா பானர்ஜி, 2021-இல் 'கேலா ஹோபே' என்ற சொல்லை உருவாக்கிய தேபாங்ஷு பட்டாச்சார்யா உள்ளிட்ட பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பாஜகவுக்கு எதிராக மம்தா மெகான் ப்ளான் அமைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவின் பவானிபூர் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியுடன் மோதவுள்ளார். இது 2026 சட்டமன்றத் தேர்தலில் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. அவர் 2011 முதல் இத்தொகுதியில் மூன்றுமுறை வெற்றி பெற்றுள்ளார். ஒருகாலத்தில் மம்தாவின் உதவியாளராக இருந்த சுவேந்து, 2021-இல் நந்திகிராமத்தில் மம்தாவை தோற்கடித்தார். இது, மாநில சட்டமன்றத்திற்கு மீண்டும் திரும்புவதற்காக மம்தாவை பவானிபூரில் போட்டியிடத் தூண்டியது. அவர் அந்த இடைத்தேர்தலில் 58,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

