நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயர்வு... இன்று முதல் அமல்!
நாடு முழுதும் 12,617 பயணியர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணியருக்கு பெரிய பாதிப்பு இல்லாமல், சிறிய அளவுக்கு கட்டண உயர்வு குறித்து பரிசீலித்து வருவதாக, ரயில்வே துறை கடந்த வாரம் தெரிவித்திருந்தது. கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு ரயில் கட்டணத்தில் மாற்றம் செய்திருந்த நிலையில், தற்போது ரயில் கட்டணத்தை சிறிது உயர்த்தி, ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, 500 கி.மீ.,க்கு மேலான நீண்ட துார பயணங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
AC Chair Car, AC 3-tier, AC 2-tier, AC முதல் வகுப்பு உள்ளிட்டவற்றின் கட்டணங்கள் கிலோ மீட்டருக்கு இரண்டு பைசா உயர்த்தப்பட்டுள்ளன.
இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட ரயில்களில் முதல் 500 கிலோ மீட்டருக்கு கட்டண உயர்வு இல்லை. 501 முதல் 1500 கிலோமீட்டர் வரை இயக்கப்படும் ரயில்களுக்கு 5 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 1501 முதல் 2500 கிலோமீட்டர் தொலைவு வரை 10 ரூபாயும், 2501 முதல் 3000 கிலோமீட்டர் தொலைவு வரை 15 ரூபாயும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத ஸ்லீப்பர் வகுப்பு ரயில் கட்டணமும், சாதாரண முதல் வகுப்பின் கட்டணமும் கிலோமீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது
மெயில் & விரைவு ரயில்களில் உள்ள இரண்டாம் வகுப்பு, ஸ்லீப்பர் வகுப்பு, முதல் வகுப்பு கட்டணங்கள் கிலோமீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அன்றாட பணிகளை பூர்த்தி செய்யும் புறநகர் ரயில் சேவைக்கான தினசரி டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.