டெல்லியில் முதல்வர் விஜய்.. முக்கியத்துவம் பெறும் பயணம்!
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்ற தவெக தனிக்கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், விசிக, இடதுசாரிகள், காங்கிரஸ், ஐஎம்யூஎல் உள்ளிட்ட ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. சட்டப்பேரவையில், அவ்வரசுக்குக் கிடைத்த நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு காங்கிரஸ், ஐஎம்யூஎல், விசிக உள்ளிட்ட ஆதரவுக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் தவெக இடம் கொடுத்துள்ளது. இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு முதல்வர் விஜய் டெல்லி சென்றடைந்தார்.
டெல்லி சென்ற முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். மாலை 4.30 மணி அளவில், இச்சந்திப்பு நடைபெறும் என பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் விஜய் சந்திக்கவுள்ளார். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோரையும், அவர் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜயின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர், என்னென்ன கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைப்பார் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

