TMC கட்சியை உடைக்கிறதா பாஜக? எம்பியின் பதிலால் சலசலப்பு.. மேற்கு வங்கத்தில் அரசியல் புயல்!
திரிணாமுல் காங்கிரஸ் மீது சுமார் 50 எம்.எல்.ஏ.க்களும், 20 எம்பிக்களும் அதிருப்தியில் இருப்பதாகவும், கட்சியின் மத்திய தலைமை அனுமதி அளித்தால் அவர்கள் பாஜகவுக்கு மாறத் தயாராக இருப்பதாகவும் பாஜக எம்.பி. சௌமித்ரா கான் தெரிவித்திருப்பது மேற்கு வங்க அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு, முதன்முறையாக பாஜக அரசு அமைந்துள்ளது. அக்கட்சியின் முதல்வராக பதவியேற்ற நிலையில் சுவேந்து அதிகாரி, தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார். இதற்கிடையே, தேர்தலில் பலத்த தோல்வியடைந்த திரிணாமுல் காங்கிரஸ் சமீபகாலமாக உட்கட்சிப் பூசலை எதிர்கொண்டு வருகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ஐ-பிஏசி என்ற அரசியல் ஆலோசனை நிறுவனமே காரணம் என கல்யாண் பானர்ஜி மற்றும் ரிஜு தத்தா போன்ற கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இதே குற்றச்சாட்டை திரிணாமூல் காங்கிரஸின் பராசத் நாடாளுமன்ற உறுப்பினரும், மம்தா பானர்ஜியின் நீண்டகால கூட்டாளியுமான ககோலி கோஷ் தஸ்திதாரும் வைத்திருந்தது அக்கட்சியின் உட்கட்சிப் பூசலை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது. மேலும், தன் கட்சிப் பதவியிலிருந்தும் ககோலி விலகியிருந்தார்.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் மீது சுமார் 50 எம்.எல்.ஏ.க்களும், 20 எம்பிக்களும் அதிருப்தியில் இருப்பதாகவும், கட்சியின் மத்திய தலைமை அனுமதி அளித்தால் அவர்கள் பாஜகவுக்கு மாறத் தயாராக இருப்பதாகவும் பாஜக எம்.பி. சௌமித்ரா கான் தெரிவித்திருப்பது மேற்கு வங்க அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. மேலும், ’கட்சியுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படும் தலைவர்களை பாஜக தலைமை கட்சியில் சேர்க்க முடிவு செய்தால், திரிணாமுல் காங்கிரஸ் ஓர் அரசியல் சக்தியாகவே இல்லாமல் போய்விடும்’ எனத் தெரிவித்துள்ளார்.
பராசத் எம்.பி. ககோலி கோஷ் தஸ்திதார் பல திரிணாமூல் எம்எல்ஏக்களுடன் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டதை அடுத்து, இந்த சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது. இன்னொரு புறம், சமீபத்திய நாட்களில் பல்வேறு நகராட்சிகளைச் சேர்ந்த சுமார் 100 கவுன்சிலர்கள் ராஜினாமா செய்திருப்பதும், திரிணாமுல் காங்கிராஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், இந்த கூற்றுகளை திரிணாமூல் எம்.பி. சௌகதா ராய் நிராகரித்துள்ளார். அவர், “இது முற்றிலும் பொய். சௌமித்ரா கானும் பாஜகவும் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இதுபோல எதுவும் நடக்கப்போவதில்லை” என தெரிவித்துள்ளார்.

