திருப்பதி கூட்ட நெரிசல் உயிரிழப்பு | ரோஜா எழுப்பிய கேள்விக்கு பவன் கல்யாண் கொடுத்த பதில்!
வைகுண்ட ஏகாதசி நாளில் திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி ஆலயத்தில் நடைபெறும் வைகுண்ட துவார தரிசனத்தை காண்பதை பக்தர்கள் பெரிதும் விரும்புவர். ஜனவரி 10 முதல் நடைபெறும் 10 நாள் வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச டிக்கெட்டுகளை வாங்குவதற்காக திருப்பதியில் Bairagi Patteda என்ற இடத்தில் டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த டிக்கெட்டுகளுக்காக பலமணிநேரம் பக்தர்கள் காத்திருந்த நிலையில், திடீரென கேட் திறக்கப்பட்டதால், ஒரேநேரத்தில் அனைவரும் முண்டியடித்ததில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 40க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களை, மருத்துவமனையில் நேரில் சென்று பார்த்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆறுதல் கூறினார். முன்னதாக விபத்து நடந்த இடத்திற்குச்சென்று அவர் பார்வையிட்டார். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே கூட்டநெரிசல் சம்பவத்துக்கு கோயில் நிர்வாகம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ”ஆன்மிகத்தலமான திருப்பதி அரசியலுக்கான இடமாகி மாறிவிட்டது. கோயிலின் புனிதத்தன்மையில் ஆளும் கட்சி நிறைய சமரசங்களை செய்து கொண்டுள்ளதாகவும் பக்தர்கள் நலனில் அக்கறை காட்டப்படுவதில்லை” என திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் கருணாகர் ரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதுபோல், ஆந்திராவின் முன்னாள் அமைச்சர் வேலம்பள்ளி ஸ்ரீநிவாசும் மாநில அரசை விமர்சித்துள்ளார். அவர், ”அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என்று தெரிந்தும் உரிய ஏற்பாடுகளை செய்யாததுதான் இவ்வளவு பெரிய அசம்பாவிதத்திற்கு காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றோர் முன்னாள் அமைச்சர் ரோஜா, ”திருப்பதியில் கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும்; தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்ப வேண்டும். திருப்பதி லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை செய்த துணை முதல்வர் பவன் கல்யாண், இந்த சம்பவத்திற்கும் தீட்சை செய்வாரா? அல்லது சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்து பவன் கல்யாண் ராஜினாமா செய்வாரா” என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
“விபத்துக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்க வேண்டும்” என எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கூறியுள்ளது.
இதற்கிடையே, கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்து திருப்பதி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இவ்வளவு போலீஸ் அதிகாரிகள் என்ன செய்தார்கள்? நம்மிடம் பாதுகாப்பு இருந்தும் சரியான திட்டமிடல் இல்லை. இதற்கு திருப்பதி கோயில் நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும். கோயில்களில் விஐபி கவனம் அதிகரித்துள்ளது. நமக்குத் தேவை ஒரு பொதுவான பக்தர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.