ரயில் நிறுத்தப் போராட்டம்; விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் பெரும் சங்கங்கள்

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்முகநூல்

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020-2021 ஆண்டுகளில் டெல்லி எல்லை பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக நடத்திய போராட்டத்தின் இறுதியில் 3 சட்டங்களும் திரும்ப பெறப்பட்டது. அந்த சமயத்தில் விவசாயிகள் மற்ற கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்ட்விட்டர்

அதன்படி

- டாக்டர் சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும்.

- தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் 700 ரூபாயாக அதிகரிக்க வேண்டும்.

- மின்சாரத் திருத்த மசோதா-2020 -யை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாய தொழில்களைச் சார்ந்தவர்களின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

- விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் சார்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

- லக்கிம்பூர் கேரி சம்பவத்தின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்

என பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
கண்ணீர் புகை குண்டு வீச்சு.. தண்ணீர் பாய்ச்சல்.. தள்ளுமுள்ளு.. தடைகளை உடைத்த விவசாயிகள் போராட்டம்!

இதன்காரணமாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், டெல்லியை முற்றுகையிடும் பேரணியில் ஈடுபட முயன்றனர். இருதரப்பிற்கும் இடையேயான முந்தைய பேச்சு வார்த்தைகள் பலன் தராததால் செவ்வாய்கிழமை (பிப்ரவரி 13) அன்று விவசாயிகள் தங்களது எதிர்ப்புப் பேரணியைத் தொடங்கினர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்pt web

இந்த பேரணியை தொடங்கியபோது எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். காவல்துறையினர் குவிக்கப்பட்டு, விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாமல் இருப்பதை உறுதிபடுத்த தடுப்புகளும், முள் வேலிகளும் அமைக்கப்பட்டன. முதல் நாளில் நடத்தப்பட்ட பேரணிகளில் மோதல்கள் காயங்கள் ஏற்பட்ட போதும் பேரணி தொடர்ந்து நடந்தவண்ணமே இருந்தது.

இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இரண்டு முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு தரப்பில் மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. டெல்லொ சலோ அணிவகுப்புக்கு மத்தியில் மத்திய அரசும், விவசாய தலைவர்களும் மூன்றாவது சுற்று பேச்சு வார்த்தைக்கு தயாராகி வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, நித்யானந்த் ராய், பியூஸ் கோயல் போன்றோர் இன்று மாலை வீடியோ கான்பரன்சிங் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

37 விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா போன்ற அமைப்புகளும் விவசாய சங்கங்களின் போராட்டத்திற்கு தங்களது ஆதரவை வழங்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஷம்பு எல்லை மற்றும் கானௌரி எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாய சங்கங்களுக்கு பெரிய சங்கங்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன. அதன்படி பாரதிய கிசான் யூனியன் (உக்ரஹான்), பாரத் கிசான் யூனியன் டகவுண்டா (தானர் பிரிவு) போன்ற விவசாய சங்கங்கள் மாநில அளவில் ரயில் ரோகோ (ரயில்களை நிறுத்த) போராட்டத்தை அறிவித்துள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி (இன்று) பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளன.

ஹர்மீத் சிங் காடியனின் பாரதிய கிசான் யூனியன் (காடியன்) சங்கமும், சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பின் பஞ்சாப் பிரிவும் பிப்ரவரி 16 ஆம் தேதி நாடுதழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இன்று பஞ்சாப் சுங்கச்சாவடிகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கூடுதல் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com