"இது தேர்தலே கிடையாது; இனி தேர்தலுக்கான தேவையும் இந்தியாவில் கிடையாது" - கொதித்து பேசிய ஆர்.கே!
243 தொகுதிகள் கொண்ட பிகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11-ஆம் தேதிகளில் இரண்டுகட்டமாக நடைபெற்றது. முதற்கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளில் நவம்பர் 11ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. 190 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், 50 இடங்களில் மகா கட்பந்தன் கூட்டணியும் முன்னிலை வகித்து வருகின்றன. தலா 101 இடங்களில் போட்டியிட்ட பாஜகவும், ஜேடியும் முறையே 86, 76 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. அதேபோல் 143 இடங்களில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் 35 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 7 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
NDA கூட்டணி முன்னணி பெறுவது பற்றி மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே புதிய தலைமுறையில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது, "மஹாராஷ்டிராவிலும் உத்திக்கு சம்பந்தமில்லாத முடிவு வந்தது. அந்த முடிவுக்கு பிறகு தான் தெரிகிறது ஒவ்வொரு தொகுதியிலிலும் 5000 பேர் உபியிலிருந்து வந்து சேர்ந்திருக்கிறார்கள் என. பீகாரில் SIRக்கு பிறகு இது தெரிந்த விஷயம் தான். உபியிலிருக்கும் 5000 பேர் பிகாரின் ஒரு தொகுதியிலும் இருக்கிறார்கள். எனவே இது தேர்தலே கிடையாது, இனி தேர்தலுக்கான தேவையும் இந்தியாவில் கிடையாது. ஒவ்வொரு தேர்தலிலும் நான் பார்க்கும் விஷயம் என்ன என்றால் பிஜேபி தனது தேர்தல் வியூகத்தை மாற்றிக்கொண்டே வருகிறது.
2017ல் பண மதிப்பிழப்பு நடக்கிறது, எதிர்க்கட்சிகளிடம் காசில்லாமல் பிஜேபிக்கு மட்டுமே காசு இருக்கிறது. 2019ல் புல்வாமா வருகிறது, பிரதமரே நின்றார். இறந்த வீரர்களின் படத்தை வைத்துக் கொண்டு பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்படி செய்யக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் வரைமுறையை மீறி அதை செய்கிறார். 2024ளிலும் இப்படி ஒரு அவலம் நடக்கிறது. பல இடங்களில் தேர்தல் ஆணையம் Democratic Votersஆக மாற்றுகிறது. இப்போது SIR நடக்கும் போது பிகார் SIRல் உங்கள் பெயர் இருந்தால் அதை ஆதாரமாக எடுத்துக் கொள்வதாக சொல்கிறார்களே அது என்ன நியாயம்?
12 மாநிலங்களில் SIR என்ற விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். SIRக்கு வழக்கு போடப்பட்டது, ஆனால் நீதிமன்றமும் எதுவும் செய்யவில்லை. தேர்தலே முடிந்துவிட்டது. நான் என்ன சொல்கிறேன் என்றால் மகாராஷ்டிரா தேர்தலிலும் இதுவே தான் நடந்தது. SIR மூலம் நிரூபிக்கப்பட்ட விஷயம் என்ன என்றால், 5000 வாக்காளர்கள் பிகாரில் நுழைத்திருக்கிறார்கள். இதில் இத்தனை குழப்பங்கள் இருக்கிறது. இதனை ஒரு வழக்காக காங்கிரஸ் மற்றும் சில கட்சிகள் எடுத்து செல்கிறார்கள். உச்சநீதிமன்றம் இன்றுவரை அதில் ஒரு முடிவே சொல்லவில்லை. தேர்தல் ஆணையத்தின் பணி என்ன? ஒரு வாக்காளரை இந்தியாவின் வாக்காளரா எனக் கண்டு சேர்ப்பது. ஆனால் என்னால் கூட கடந்த தேர்தலில் வாக்களித்த விவரங்களை கொடுப்பதில் அவ்வளவு சவால் இருக்கிறது.
இரண்டாவது உச்சநீதிமன்றம் இன்னும் தீர்ப்பளிக்கவில்லை. மூன்றாவது தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பது என்ன மாதிரியான அவலம்? அதை On Going Scheme என தேர்தல் ஆணையம் சொல்கிறது. தமிழ்நாட்டில் இருந்த On Going Schemeஐ தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையம் நிறுத்தியதே ஏன் நிறுத்தியது? மறுபடி SIR நடத்திக் கொண்டு 12 மாநிலங்களில் அதிகாரத்திற்கு வர முயற்சிக்கிறார்கள். இனி தேர்தல் இந்தியாவில் தேவை இல்லை என நான் கருதுகிறேன். தமிழ்நாட்டை தூக்கி பிஜேபிக்கு கொடுத்துவிடலாம்" என்றார்.

