வரலாற்றில் இல்லாத சரிவு : பரிதாபத்தில் ரூபாயின் மதிப்பு.. சரிவை தடுக்க போராடும் ரிசர்வ் வங்கி.!
இந்தியா தனது தேவையில் பெரும்பாலான பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இந்திய ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பதால் இந்திய பொருளாதாரத்தில் அதிக அளவு பற்றாக்குறை இருந்து வருகிறது.
குறிப்பாக இந்தியா தனது கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி செய்து வருகிறது. இதன் காரணமாக இதன் விலைகள் சர்வதேச அளவில் உயரும்போது இறக்குமதிக்கான இந்தியாவின் செலவுகள் அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் அமெரிக்க - ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலையும், தங்கத்தின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியா இறக்குமதிக்காக அதிக செலவு செய்யும் சூழல் உருவையுள்ளது. இறக்குமதிக்கான தொகையை இந்தியா பெரும்பாலும் அமெரிக்க டாலரிலேயே செலுத்தி வருவதால் அதற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் டாலரின் தேவை அதிகரித்து இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
அதிலும் நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு செப்டம்பர் 29-ம் தேதி அன்று ஒரு கட்டத்தில் 96.38 ரூபாய் என வரலாற்றில் இல்லாத சரிவை தொட்டது. ரூபாயின் மதிப்பு மேலும் கட்டுப்பாடின்றிச் சரிவதைத் தடுக்க, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது அந்நியச் செலாவணி கையிருப்பில் இருந்து நேரடியாகச் சந்தையில் டாலர்களை விற்பனை செய்து சரிவின் வேகத்தைக் கட்டுப்படுத்தியது.
இதுபோன்ற நடவடிக்கைகளால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று நாள் முடிவில் 95.95 என்ற அளவு சற்று உயர்ந்தது. எனினும் நீண்ட காலம் ரிசர்வ் வங்கியால் தொடர்ந்து இதுபோல சரிவை தடுத்து நிறுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் கடந்த மே 15-ம் தேதி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 96.35 என்ற வரலாற்று சரிவை சந்தித்தது. ஆனால் இப்போது அதனை விட ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் மதிப்பின் இந்த சரிவு பங்குசந்தையில் எதிரொலித்ததால் நேற்று ஒரே நாள் பங்குச்சந்தையின் மதிப்பு 8 லட்சம் கோடி அளவு சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் கொள்கையில் தீவிர மாற்றங்கள் அல்லது, அமெரிக்க - ஈரான் போர் முடிவடையும் அறிகுறிகள் இருந்தால் மட்டுமே ரூபாயின் மதிப்பை மீட்டுகொண்டுவர முடியும் என பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

