நண்பனை உயிரோடு மீட்ட ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’.. உண்மையில் 2008ம் ஆண்டு குணா குகைக்குள் நடந்தது என்ன?

“கிட்டத்தட்ட குணா குகையின் மையப்பகுதியில் சுமார் 600 அடி ஆழத்தில் சிக்கியிருந்தார் சுபாஷ். நவம்பர் மாதம் மழைக்காலம் என்பதால், ஏற்கனவே இருண்டிருந்த குகை மேலும் இருளால் சூழ, போலீஸாரிடம் சென்று சில நண்பர்கள் முறையிட்டுள்ளனர். அப்போது...”
விழுந்த சுபாஷும், மீட்ட ஷிஜுவும்
விழுந்த சுபாஷும், மீட்ட ஷிஜுவும்புதியதலைமுறை

“மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல..”

- என்பதுதான், கடந்த சில தினங்களாக பார்க்கும் இடமெல்லாம் கேட்கும் ஒற்றை வரி.. சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்திருக்கும் ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ படமும், அது படமாக்கப்பட்ட விதமும் கடந்த சில நாட்களாக பலராலும் சிலாகிக்கப்பட்டு வருகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படம் எடுக்கப்பட்ட நிலையில், 2008ம் ஆண்டு, குறிப்பிட்ட அந்த குணா குகையில், ஒரு பாறையின் இடுக்கில், உண்மையில் என்னதான் நடந்தது என்பதை திரும்பிப்பார்க்கும் முயற்சியே இந்த சிறப்புத் தொகுப்பு.

2008-ல் நடந்தது என்ன?

கேரள மாநிலம் கொச்சி அருகே இருக்கும் ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் 11 பேர் கொண்ட நண்பர்கள் குழு, அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி, ஒருமுறை கோவாவிற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு பின் அது தோல்வியில் முடிய, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர். 2008ம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் அவர்கள் கொடைக்கானலுக்கு வந்தபோது, இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். குணா குகை வரை சென்றுவரலாம் என்று நண்பர்கள் குழுவில் ஒருவர் கூற, பார்ப்பதற்கே வியப்பை ஏற்படுத்தும் குகையின் முகப்புக்கு சென்று சேர்கின்றனர் அந்த நண்பர்கள்.

விழுந்த சுபாஷும், மீட்ட ஷிஜுவும்
அலைமோதும் கூட்டம்; கேரளாவையே ஓவர்டேக் செய்த வசூல்! தமிழக ஆடியன்ஸை "Manjummel Boys" கவர்ந்தது எப்படி?

1991ம் ஆண்டுக்கு முன்பு வரை டெவில்ஸ் கிச்சன் என்று அழைக்கப்பட்ட குகை, நடிகர் கமல்ஹாசனின் குணா படம் அதில் படமாக்கப்பட்டதற்கு பிறகு, ‘குணா குகை’ என்றே அழைக்கப்பட்டது. பார்க்கவே வியப்பை ஏற்படுத்தும் கொடைக்கானல் தூண் பாறைகளுக்கு உள்ளே பல நூறு அடிகளுக்கு நீள்வதுதான் பேய்க்குகை / சாத்தானின் சமையலறை என்றும், டெவில்ஸ் கிச்சன் என்றும் அழைக்கப்படும் குணா குகை. குகையின் ஆபத்தை உணராமல், அதில் நுழைந்தவர்கள் பலரும் உயிரிழந்த நிலையில், அவர்களின் சடலத்தைக்கூட மீட்க முடியாத அளவுக்கு ஆபத்தை கொண்டுள்ள, அதே குகையில்தான், தடுப்புகளைத்தாண்டி நுழைந்தது இந்த நண்பர்கள் குழு.

விழுந்த சுபாஷும், மீட்ட ஷிஜுவும்
EXCLUSIVE | “கமல் சாரை பார்த்தாச்சு... ராஜா சாரை பார்க்கணும்” - Manjummel Boys இயக்குனர் சிதம்பரம்!

படத்தில் இடம்பெற்றது போன்றே உள்ளே சென்று விளையாடுத்தனமாக சுற்றிப்பார்த்தபோது, கண்களுக்குத் தெரியாமல் இருந்த பொந்துக்குள் கண நொடியில் விழுந்து காணாமல் போகிறார் சுபாஷ். இந்த நண்பர்கள் குழுவில், சுபாஷ் எப்போதுமே சுட்டித்தனமாக இருப்பதும், அவ்வப்போது ஒளிந்துகொண்டு ஏமாற்றுவதும் வழக்கமாக வைத்திருந்த நிலையில், இதுவும் விளையாட்டாக இருக்கும் என்ற நினைத்தவர்களுக்கு சில நிமிட தொடர் மௌனத்திற்கு பிறகுதான், உண்மை உரைக்கத் தொடங்கியது.

600 அடி ஆழத்தில் சுபாஷ்... தைரியமாக சென்ற குட்டேட்டன்!

கிட்டத்தட்ட குணா குகையின் மையப்பகுதியில் சுமார் 600 அடி ஆழத்தில் சிக்கியிருந்தார் சுபாஷ். நவம்பர் மாதம் மழைக்காலம் என்பதால், ஏற்கனவே இருண்டிருந்த குகை மேலும் இருளால் சூழ, போலீஸாரிடம் சென்று சில நண்பர்கள் முறையிட்டுள்ளனர். அப்போது, காவலர்கள் மிகவும் கடுமையாக நடந்துகொண்டதாக தெரிகிறது. குகைக்கு வந்து பார்த்துவிட்டு, “இதுவரை இங்கு வந்து விழுந்தவர்கள் பிழைத்ததில்லை. இவனும் பிழைக்க மாட்டான்” என்று அவர்கள் கூற, நீண்ட நேரத்திற்கு பிறகு உள்ளே இருப்பவர் உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது. அதன்பிறகு இவர்கள் அனைவரும் கீழே இறங்க முற்படுகின்றனர்.

விழுந்த சுபாஷும், மீட்ட ஷிஜுவும்
Manjummel Boys | சிறு சிறு வேடங்கள் முதல் தயாரிப்பாளர் வரை... ‘குட்டன்’ Soubin Shahir வளர்ந்த கதை!

மழையும் வெளுத்து வாங்கியதால், குறிப்பிட்ட அந்த குகை பொந்துக்குள் மழைநீர் ஓடிய நிலையில், படத்தில் இடம்பெறுவது போன்றே, நீரை திசைமாற்ற நண்பர்கள் கீழே படுத்து அரணாக மாறுகின்றனர். மீட்புப்படை வீரரோ “என்னால் முடியாது” என்று கைவிரிக்க, ‘என் நண்பன் தானே, நானே மீட்கிறேன்’ என்று முன்வருகிறார் ஷிஜு.

விழுந்தவரும், மீட்டவரும்
விழுந்தவரும், மீட்டவரும்

படத்தில் இவரது பாத்திரம் குட்டன் என்று வடிவமைக்கப்பட்டிருக்கும். டார்ச் லைட்டை மாட்டிக்கொண்டு கடுமையான இடுக்குகளை கொண்ட குகைக்குள் ஷிஜு சென்ற நிலையில், கைக்கு எட்டிய தூரத்தில் பாறை மீது விழுந்துகிடந்த சுபாஷை பார்க்கிறார். கயிறும் அத்தோடு தீர, இன்னுமொரு கயிறைக்கொண்டு வந்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தன் தோளோடு தோள் கட்டி நண்பனை மேலே கொண்டுவருகிறார் ஷிஜு. படத்தில் காட்டப்பட்டது போல, அத்தனைபேரும் கயிறு இழுக்கத்தெரிந்தவர்கள் என்பதால், மீட்புப்படை உதவியோடு, உயிரை பணயம் வைத்து தோழனை மீட்கின்றனர்.

இப்படியாக கடுமையான காயத்திற்கு பிறகு இருவரும் மீட்கப்பட்ட நிலையில், பல நாள் சிகைச்சைக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். மீட்கப்பட்ட சுபாஷ் இதுவரை திருமணம் செய்துகொள்ளாத நிலையில், அவரை மீட்டு வந்த ஷிஜுவுக்கு திருமணமாகி 2 பிள்ளைகளும் இருக்கின்றனர். 2008ம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு பின், சரியாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு 11 பேர் கொண்ட இந்த நண்பர்கள் குழு மீண்டும் கொடைக்கானல் வரை சென்று வந்துள்ளனர்.

இதற்கிடையே, உயிரை துச்சமென நினைத்து நண்பனை மீட்ட ஷிஜுவுக்கு கேரள அரசு விருது வழங்கி கவுரவிக்கவும் செய்துள்ளது.

மஞ்ஞுமல் பாய்ஸ் படப்பிடிப்பின் போது, கடந்த வருடம் இவர்கள் மீண்டும் குணா குகைக்கு வந்து சென்றது தகவலுக்காக.

குணா குகைக்குச் சென்ற நண்பர்கள் குழு
குணா குகைக்குச் சென்ற நண்பர்கள் குழு

கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 25 பேர் இந்த குகைக்குள் விழுந்து உயிரைவிட்ட நிலையில், சுபாஷ் விழுந்து மீட்கப்பட்ட பிறகு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டு, குகைக்குள் இருக்கும் பொந்துகள் இரும்பு கம்பி போன்றவற்றைக் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் இதுபோன்ற முன்னெடுப்புகளால் கடந்த ஏழு ஆண்டுகளாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது ஆறுதல் செய்தி. இப்படியாக நடந்த உண்மை சம்பவத்தையே சற்றே த்ரில்லர் காட்சிகளுடன் படமாக்கி பார்வையாளர்களின் நெஞ்சில் கனத்தை கடத்தியிருக்கிறார் படத்தின் இயக்குநர் சிதம்பரம்.

இதில் மற்றொரு சுவாரஸ்யமாக, பட வெற்றிக்குப்பின் நிஜ குட்டேட்டனும் ரீல் குட்டேட்டனும் சந்தித்துள்ளனர். அந்தப் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.!

நிஜ குட்டேட்டனும் ரீல் குட்டேட்டனும்...

#ManjummelBoys | #Gunacave
நிஜ குட்டேட்டனும் ரீல் குட்டேட்டனும்... #ManjummelBoys | #Gunacave

எழுத்து: யுவபுருஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com