2023-24 | தேசியக் கட்சிகள் பெற்ற நன்கொடை.. முதலிடத்தைப் பெற்ற பாஜக!
தேர்தல் ஆணையத்தில் கட்சிகள் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் தகவல்களை சேகரித்து ADR அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, 2023-24ஆம் நிதியாண்டில் தேசியக் கட்சிகள் மட்டும் 2ஆயிரத்து 544 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இதில் பாஜகவுக்கு மட்டும் 2ஆயிரத்து 243 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டில் பாஜகவுக்கு 719 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்த நிலையில் அது 2023-24இல் 211 சதவிகிதம் உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடை 79 கோடி ரூபாயிலிருந்து 281 கோடியாக அதிகரித்துள்ளது. இது 252 சதவிகித உயர்வாகும்.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு கிடைத்த 2ஆயிரத்து 243 கோடி ரூபாய் நன்கொடையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய தொகை மட்டும் 2ஆயிரத்து 64 கோடி ரூபாய். காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடையான 281 கோடி ரூபாயில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு 190 கோடி ரூபாயாக உள்ளது. 2022-23ஆம் நிதியாண்டை விட, 2023-24இல் தேர்தலை முன்னிட்டு தேசியக் கட்சிகளுக்கு ஏறத்தாழ 200 சதவிகிதம் கூடுதலாக அதாவது ஆயிரத்து 693 கோடி ரூபாய் அதிகமாக நன்கொடைகள் குவிந்திருப்பது ADR அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. 20ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு அதிக மதிப்புடைய நன்கொடைகளை தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்ற அடிப்படையில், இந்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரத்தில், அதிக அளவில் நன்கொடை வழங்கிய நிறுவனமாக புருடென்ட் எலக்ட்ரால் டிரஸ்ட் என்ற நிறுவனம், 880 கோடி ரூபாயை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ளது. பாஜகவுக்கு அந்த அமைப்பு, 723 கோடி ரூபாயும் காங்கிரஸுக்கு 156 கோடி ரூபாயையும் வழங்கியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில், டிரையம்ப் எலக்ட்ரால் பண்ட் என்ற நிறுவனம், 127 கோடி ரூபாயை பாஜகவுக்கு வழங்கியுள்ளது.