ராஜஸ்தான்| அமலுக்கு வந்தது கட்டாய மதமாற்ற தடைசட்டம்... விதிகள் என்ன?
ராஜஸ்தான் சட்டமன்றத்தில் சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மதமாற்ற தடைச்சட்டத்தை நிறைவேற்றிய எட்டாவது மாநிலமாகிறது. உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் ஏற்கெனவே இந்தச் சட்டம் அமலில் உள்ள நிலையில் தற்போது இந்தப்பட்டியலில் ராஜஸ்தானும் இணைந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பஜன் லால் சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசு கடந்த பிப்ரவரி மாதம் கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதாவை அந்த மாநிலத்தின் சட்டபேரவையில் அறிமுகப்படுத்தியது. அதன்படி கட்டாய மதமாற்றம் ஜாமீன் இல்லாத குற்றமாக கருதப்படும் என்றும், கட்டாய மதமாற்றத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த மசோதா கூறியது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், இந்த மசோதாவை ராஜஸ்தான் அரசாங்கம் செப்டம்பர்-3 ஆம் தேதி திரும்பப்பெற்றது. பிறகு திருத்தியமைக்கப்பட்ட கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதாவை திரும்பவும், ராஜஸ்தான் சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த மசோதா தொடர்பாக மாநில சட்டப்பேரவையில் ஆளும் பாஜக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் விவாதம் நடைபெற்று வந்தது.
குறிப்பாக, முதலில் அறிமுகப்படுத்த மசோதாவை விட, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மசோதாவில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றன. உதாரணமாக, ஒருவரை அவர்களின் மூதாதையர் மதத்திற்கு மீண்டும் மாற்றுவது தொடர்பான எந்த ஒரு வார்த்தையும் (reconversion) மசோதாவின் முந்தைய பதிப்பில் இடம்பெறவில்லை. அதேசமயம், மதமாற்றம் தொடர்பான தகவல் அல்லது புகாரை தெரிவிக்க வேண்டுமென்றால், பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவரது இரத்தத் தொடர்புடைய உறவினர்களால் மட்டுமே செய்யக்கூடியதாக இருந்தது. ஆனால், தற்போது அந்த புகாரை யார் வேண்டுமானாலும் அளிக்கலாம் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்த நிலையில் தற்போது, திருத்தியமைக்கப்பட்ட கட்டாய மதமாற்ற சட்டம் ராஜஸ்தானில் நடைமுறைக்கு வந்து இருக்கிறது. இந்த புதிய சட்டம் சமூக ஒற்றுமையை சிதைக்கக்கூடும் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டும் நிலையில், சட்டமன்றத்தில் உரையாற்றிய மாநில உள்துறைத் துறை அமைச்சர் ஜவஹர் சிங் பெதாம், இந்த மசோதா நிறைவேற்றப்படுவதால் சமூகத்தில் அமைதியும், ஒற்றுமையும் நிலைநிறுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்த சட்டத்தின் கீழ், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 7 முதல் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், பெண்கள், சிறார், பட்டியல் சமூகத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரை மதமாற்றம் செய்தால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சில வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் அளவிற்கு விதிகள் கடுமைபடுத்தப்பட்டு இருக்கின்றன. இந்தச் சட்டத்தின் கீழ் அனைத்து குற்றங்களும் பிணையில் வெளிவர முடியாதவை. மேலும், மதமாற்றத்திற்காக மட்டுமே செய்யப்படும் திருமணங்கள் செல்லாதவை என அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் மதமாற்றம் செய்ய விரும்புவோர் 90 நாட்களுக்கு முன்பே அந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிப்பது கட்டாயம்.
சட்டவிரோத மதமாற்றம் மேற்கொள்ளுவோருக்கு தண்டனை வழங்கும் வகையில் மசோதாவில் இடம் பெற்றிருக்கும் விதிகள், மூல மதத்திற்கு திரும்புபவர்களுக்கு அல்லது “கார் வாப்சி” செய்பவர்களுக்கு பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது. கார் வாப்சி என்றால் வீட்டிற்கு திரும்புதல்' என்று பொருள். அதாவது, பிற மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறுவதை சில தரப்பினர் கார் வாப்சி எனக் குறிப்பிடுகின்றனர். மசோதாவில் இதுதொடர்பாக, “எந்தவொரு நபரும் அசல் மதத்திற்கு அதாவது மூதாதையர் மதத்திற்கு மீண்டும் மாறினால், அது இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு மதமாற்றமாகக் கருதப்படாது" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மதமாற்ற சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன் லால் சர்மா, “கட்டாய மதமாற்றம் சம்பந்தமான சட்டங்கள் பல மாநிலங்களில் உள்ளன. ஆனால் ராஜஸ்தானில் இந்த மாதிரியான சட்டங்கள் இல்லை. எனவேதான் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு கட்டாயமாக மதமாற்றுவதை தடுக்க இந்த சட்டம் கொண்டுவந்திருக்கிறோம்” என தெரிவித்தார்.
இந்த மசோதா தொடர்பான விவாதத்தின்போது சிவில் லைன்ஸ் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ கோபால் சர்மா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களான ரபீக் கான், அமீன் காக்ஜி ஆகியோரை, “மூல மதத்திற்குத் திரும்ப வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மாநில உள்துறைத் துறை அமைச்சர் ஜவஹர் சிங் பெதாம் மசோதா தொடர்பான விவாதத்தில் பேசுகையில், "அரசியலமைப்பின் 25வது மத சுதந்திரத்தை உறுதி செய்கிறது. ஆனால் அந்த சுதந்திரம் என்பது ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், கல்வியறிவில்லாதோர், சுரண்டப்பட்டோர் அல்லது புறக்கணிக்கப்பட்டவர்களை பேராசை, ஆசை, பயம் அல்லது ஏமாற்றம் மூலம் தங்கள் மதத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்துவது சுதந்திரம் அல்ல" எனத் தெரிவித்தார்.