காஷ்மீர் |12,000 அடி உயரத்தில் பதுங்குக்குழி.. உணவு, கேஸ் அடுப்புடன் தங்கியிருந்த பயங்கரவாதிகள்!
ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆபரேஷன் டிராஷி 1 என்ற பெயரில் அங்கு ராணுவ அமைப்பினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி குடியரசு தினம் விமரிசையாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இதைச் சீர்குலைக்கும் நோக்கில், பயங்கரவாதிகளை அனுப்பி வைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டிருப்பதாக நமது உளவுத் துறை எச்சரித்திருந்தது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையிலும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆபரேஷன் டிராஷி 1 என்ற பெயரில் அங்கு ராணுவ அமைப்பினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு தங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர், கையெறி குண்டுகள் மூலமாகவும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியபடி அவர்கள் தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் நமது பாதுகாப்புப் படை வீரர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 7 பேர் காயமடைந்தனர். எனினும், அவர்களைப் பிடிக்கும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே இந்த தேடுதல் வேட்டையின்போது அவர்கள் தங்கியிருந்த பதுங்குக் குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 12,000 அடி உயரத்தில் உள்ள மலைப்பகுதியில் அது அமைக்கப்பட்டிருந்தது. தவிர, அந்தப் பதுங்குக்குழிக்குள் 4 பேர் வசிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், அவர்கள் சாப்பிடுவதற்காக நூடுல்ஸ் பாக்கெட்கள், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள், மசாலாப் பொருட்கள், அரிசி, தானியங்கள், காஸ் சிலிண்டர், விறகு உள்ளிட்டவை அங்கு இருந்ததையும் பாதுகாப்புப் படையினர் பார்த்து வியந்ததுடன், அதைக் கைப்பற்றியுள்ளனர். இந்த பதுங்குக் குழியை பாகிஸ்தான் பயங்கரவாதிகளான சைஃபுல்லா மற்றும் அவரது துணை தளபதி ஆதில் பயன் ஆகியோர் பயன்படுத்தி இருக்கலாம் எனவும் உள்ளூர்வாசிகளின் உதவியில்லாமல் அவர்கள் இதைச் செயல்படுத்தி இருக்க முடியாது எனவும் பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.

