15 வினாடிகளில் 30 குண்டுகள்.. அலறிய ஒலிபெருக்கி.. CRPF முகாமில் பயங்கர தாக்குதல்!
செய்தியாளர் - M.மீரா
ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படையான சிஆர்பிஎஃப் முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் இன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
குல்காமின் மிர் பஜார் அருகே உள்ள அக்ரான் பகுதியில் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த சிஆர்பிஎஃப் வீரர்களைக் குறிவைத்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், வெறும் 15 விநாடிகளில் சுமார் 30 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் சத்தம் பதிவாகியுள்ளது. அடுத்த ஒரு நிமிடத்திற்குள் மேலும் பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதும் கேட்கிறது. இதையடுத்து, ஆயுதங்களுடன் வீரர்கள் தாக்குதல் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து செல்வதும் காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இந்தத் தாக்குதலில் 3 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனந்த்நாக் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மூவரும் தற்போது ஆபத்தான நிலையில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டு, வாகனச் சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

